Indhira Sounderrajan
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Kadhal Sadhurangamஇந்திரா சௌந்தர்ராஜனிடம் 'ஆன்மீக த்ரில்லர்'களை மட்டுமே எதிர்பார்த்த என் போன்ற வாசகர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி இந்த 'காதல் சதுரங்கம்'. பொதுவாக சதுரங்கத்தை (chess) mind game என்று சொல்வார்கள். உடல் அசையாவிட்டாலும் மனதால் அசராமல் ஆடவேண்டிய விளையாட்டு இந்த சதுரங்கம். எதிரியின் ஒவ்வொரு அசைவையும் முன்கூட்டியே அனுமானித்து எல்லாவற்றையும் யோசித்து விளையாடுவதால் இது எல்லோராலும் ஆடக்கூடிய விளையாட்டு அல்ல. இந்த 'காதல் சதுரங்கமும்' அப்படிப்பட்ட ஒரு ஆட்டம் தான். காதலர்களை பிரிக்க அவர்கள் தந்தையர்கள் கட்டம் நகர்த்தும் சதுரங்கம். இது இந்திரா சௌந்தர்ராஜன் சன் டி.விக்காக எழுதிய தொடராம். இந்த நாவலை படிக்கும்போது ஆரம்பத்திலிருந்தே நமக்கு தெளிவாக தெரிகிறது - இது visual medium-க்காக எழுத்ப்பட்டது என்ற். அந்த அளவுக்கு காட்சிகளை ஷாட் வாரியாக பிரித்து எழுதியிருக்கிறார் இந்திரா. தடதடவென்று காட்சிகள் மாறுவதால் படிக்கும் நமக்கும் அந்த பரபரப்பு தொற்றிக்கொள்வதில் வியப்பு இல்லை.

 

கதைக்களம் - மதுரை. பணக்காரனான ஜோதி ஷங்கருக்கு மெக்கானிக் மாணிக்கத்தின் மகள் வசந்தாவுடன் காதல். ஃபோர்மேன் வேணுவுக்கும் முதலாளி மகள் அனுவுக்கும் காதல். ஜோதியின் தந்தை தர்மராஜனும், அனுவின் தந்தை மயில்வாகனமும் உறவினர்கள். எனவே ஜோதிக்கும் அனுவுக்கும் திருமணம் நடத்தி பணம் பணத்தோடு சேர்வது என்று முடிவெடுக்கப் படுகிறது. மாணிக்கத்தின் இறந்து போன அக்காள் மகன் வேணு. எனவே வசந்தாவுக்கும், வேணுவுக்கும் திருமணம் ஆனால் காதல் போடும் முடிச்சுக்கள் வேறு. இப்போது தர்மராஜனும், மயில்வாகனமும் சூத்ரதாரிகளாக மாணிக்கத்தையும், காதல் ஜோடிகளை வைத்து ஆட்டம் ஆடுகிறார்கள். முடிவு என்ன என்பது உண்மையிலேயே விறுவிறுப்பு.

ஆரம்பத்தில் வழக்கமான காதல் கதையாக ஆரம்பிக்கும் இந்த 'காதல் சதுரங்கம்' அவ்வளவாக சுவாரசியமில்லை என்று சில மாதங்களுக்கு முன்பு நான் ஒதுக்கி வைத்து இருந்தேன். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை கோவைக்கு பயணப்பட்ட போது தான் மேலே படிக்கலாம் என்று முடிவு செய்து மீண்டும் எடுத்தேன். 2 மணி நேரத்தில் பாதி புத்தகத்துக்கு மேல் முடித்துவிட்டேன். அத்தனை விறுவிறுப்பு. தர்மராஜனும், மயில்வாகனமும் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பது உண்மையிலேயே சஸ்பென்ஸ். சொல்லப்போனால் தமிழ் சினிமாவை பார்த்து பழகிய நமக்கு 'காதல் சதுரங்கத்தில்' பல இடங்களில் அடுத்து என்ன நடக்கும் என்பதை நம் வீட்டு சின்ன குழந்தை கூட சொல்லலாம். ஆனாலும் நம்மை புத்தகத்தில் இருந்து கண்ணை எடுக்காமல் இருக்க வைத்து இருப்பதால் இந்திரா சௌந்தர்ராஜன் வெற்றி பெற்றுவிட்டார் என்பதையே காட்டுகிறது.

சிவம், அது மட்டும் ரகசியம், காற்று காற்று உயிர் என்று த்ரில்லர்களை புணைந்த கைகளா இந்த காதல் கதையையும் எழுதியது என்பது உண்மையிலேயே ஆச்சரியமூட்டுகிறது. காலம் காலமாக வாழும் காதலை பெற்றவர்கள் பார்வையில், காதலர்கள் பார்வையில் என பல்நோக்கு கோணத்தில் அலசியிருக்கிறார் இந்திரா. இதில் காதலில் உடம்பின்/காமத்தின் பங்களிப்பு அதிகம் என்பதையும், பின்பே மனசு விஷயத்திற்குள்ளே வருகிறது என்கிற உண்மையை பட்டவர்த்தனமாக போட்டு உடைக்கிறார். "மனதை மட்டும் பார்த்து வருவது காதல் என்றால் குருடர்களும், பல உடல் ஊனமுற்றவர்களுமே அதிகம் காதலிக்கப்படவேண்டும். அவர்களின் மனதும் பார்வையும் அழகானவை, ரசனையுடையவை. ஆனால் உண்மையில் நடப்பது என்ன? அழகான ஆண்களும், கவர்ச்சியான பெண்களுமே அதிகம் காதலிக்கப் படுகின்றார்கள். நாங்கள் பார்க்கும் பையனிடமும் / பெண்ணிடமும் குணம், குடும்பம், அந்தஸ்தோடு காமமும் உள்ளது, எனவே பெற்றவர்களின் தேர்வை ஏற்று சந்தோஷமாக வாழ்வதில் பிள்ளைகளுக்கு என்ன குழப்பம்?" என்று பெற்றவர்கள் குரலாக ஒலிக்கிறார்.

 

எனினும் முடிவு - simply defying sterotypes. ஆனால் அந்த முடிவுக்கு வரும் முன்பு விவாதிக்கும் 30 பக்கங்கள் சரியான ரம்பம் & குழப்பம். சடாரென்று எடுக்கப்படும் முடிவு படு சினிமாத்தனமானது. அது மட்டுமல்ல பல இடங்களில் தொய்வை உணர முடிகிறது. மேலும் முத்து மாணிக்கத்தின் உறவை சித்தரிப்பதில் பயங்கர குழப்பம். முதலில் வள்ளியின் சகோதரி வடிவுவின் கணவன் என்று சொல்லிக்கொண்டு வருகிறார். வள்ளியையும், வசந்தாவையும் பார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு வருகிறார். அடுத்த சில பக்கங்களிலேயே ஜோதியின் சித்தப்பா என்று வருகிறது. இதை யாருமே கவனிக்கவில்லையா என்று தெரியவில்லை. மேலும் கே. பாலசந்தரின் 'வானமே எல்லையை' பிரதி எடுத்தது போல ஜோதி ஷங்கர் - வசந்தா கதை. அனு - வேணுவின் காதலில் போதுமான அழுத்தம் இல்லை.

ஆனால் கூட்டி கழித்து பார்த்தால், இதன் பலங்களான விறுவிறுப்பான கதையோட்டமும், காட்சிகள் விரியும் விதமும் சாதாரண காதல் கதையை தூக்கி நிறுத்துகிறது. இந்திராவின் portfolio-வில் ஒரு வித்தியாசமான படைப்பு இந்த 'காதல் சதுரங்கம்'. நான் இதன் டி.வி தொடர் வடிவத்தை பார்த்ததில்லை. எனவே கமெண்ட் பண்ண முடியாது. ஆனால் நாவலை இடசெருகல்கள் இல்லாமல் அப்படியே எடுத்து இருந்தால் உண்மையிலேயே ரசிக்க கூடியதாக இருந்திருக்கும். ஆன்மீக த்ரில்லர்களை தவிர்த்து பார்த்தால் 'அனலாய் காயும் அம்பிலி'களுக்கு அடுத்து இந்திராவின் வித்தியாசமான படைப்பு இந்த 'காதல் சதுரங்கம்'

புத்தக விவரம்:
பதிப்பகத்தார்:
திருமகள் நிலையம்; 16, வெங்கட்நாராயணா சாலை; தி.நகர்; சென்னை - 600 017
பக்கங்கள்: 308
விலை: ரூ. 70/-