Miscellaneous
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

இது என்ன Chicken flu மாதிரி Writer Flu-வா? அடுத்தடுத்து எழுத்தாளர்கள் இறக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தான் எழுத்தாளர் சுஜாதா மரணமடைந்தார். அந்த துக்கம் அடங்கும் முன்பே இடியென இறங்கியது எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸின் தற்கொலை செய்தி. தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் எவருக்குமே அவரது எழுத்துக்கள் மீது மோகம் இல்லாமல் இருக்கமுடியாது. அவரது "அது ஒரு நிலாக்காலம்" படித்தவுடன் துக்கம் என்னை பல நாட்களுக்கு வாட்டியது. இத்தனை சோகங்களை ஒரு மனிதனால் தாங்கமுடியுமா என்று வருத்தம் கொண்டபோது ஆனந்த விகடனில் வந்த அவர் பேட்டி என்னை உலுக்கிப் போட்டது. காரணம் "அது ஒரு நிலாக்காலம்" அவருடைய சுயசரிதையில் சில பக்கங்கள் என்று வெளியிட்டு இருந்தார்.

 

அந்த பேட்டியில் அவர் தன் துணைவியார் ஹேமாவுடன் வாழ்ந்து வருபதையும், அவர் துணைவி ஹேமாவின் இரு கிட்னிக்களும் செயலிழந்து போயிருக்கும் நிலைமையில் துன்பத்தில் வாடுகிறார் என்றும் தெரிவித்து இருந்தார். ஆனால் அந்த பேட்டி வெளிவரும் முன்பே அவர் துணைவியார் மரணம் அடைந்தார் என்பதை அடுத்த வாரத்து இதழில் படித்தபோது வருத்தம் மனதை ஏதோ பிசைந்தது. அவர் துணைவியாரின் மரணம் "ஸ்டெல்லா புரூஸ்" என்ற ராம் மோகனை மிகவும் பாதித்து இருக்கிறது. தனிமை தாங்காமல் நேற்று தூக்கில் தொங்கியிருக்கிறார். தன் தற்கொலை குறிப்பில் தன் தனிமையே இந்த முடிவுக்கு காரணம் என்று எழுதியிருப்பதில் அவர் தன் துணைவியார் மீது கொண்ட காதலும், குழந்தை இல்லாத குறையும் தெரிந்தது.

ஸ்டெல்லா புரூஸின் மறைவு நிச்சயம் தமிழ் வாசகர்களுக்கு ஒரு பேரிழப்பு என்று சொல்லலாம். 90-களில் அவர் கதைகள் இடம்பெறாத புத்தகங்களே இல்லை எனலாம். அவர் எழுத்துக்களில் எப்போதும் ஒரு தனிமயின் சோகம் இழைந்தோடும் காரணம் அவர் மரணத்தில் தான் தெரிகிறது. "அது ஒரு நிலாக்காலத்தில்" வரும் ராம்ஜி, ராம் மோகன் என்ற ஸ்டெல்லா புரூஸ் என்பது அவரது கடைசி பேட்டியை படித்த போது தான் புரிந்தது. அதில் வரும் சுகந்தா சமீபத்தில் இறந்து போன அவர் துணைவியார் ஹேமா அவர்கள். நாவலில் வந்தது போல மனநிலை குன்றி திரும்பி வந்த காதலி ஹேமாவை கவனித்துக் கொண்டு கல்யாணம் புரியாமலேயே சேர்ந்து வாழ்ந்தார் ராம் மோகன் என்கிற ஸ்டெல்லா புரூஸ். அவ்வளவு காதல் கொண்டவர் ஹேமாவின் மரணத்தை தாங்காமல் தூக்கில் தொங்கியது வியப்பில்லை.

அவருடைய 'மாயநதிகள்" மற்றும் "அது ஒரு நிலாக்காலம்" நான் படித்த அவருடைய புத்தகங்களில் மிகச்சிறந்தவை. அவருடைய "அது வேறு மழைக்காலம்" நாவலிலும் பிரிந்த காதலும், அதன் தனிமையையும் மிக தத்ரூபமாக எழுதியிருப்பார். ஸ்டெல்லாவின் எழுத்துக்களில் காதலும், இளமையும் பிரவாகம் எடுத்து ஓடும். சோகத்தையும் மீறி ஒரு இளமை துள்ளல் இருக்கும்.

ஸ்டெல்லாவின் மரணம் துரதிர்ஷ்டவசமானது. மனிதர்களின் தனிமையின் வேதனையை தன் மரணத்தின் மூலம் சமூகத்துக்கு பாடமாக சொல்லிவிட்டு போயிருக்கிறார் ஸ்டெல்லா புரூஸ்.

ஸ்டெல்லா சார், உங்கள் மரணம் எங்களுக்கு பேரிழப்பு என்றபோதிலும், உங்கள் ஆத்மா சாந்தியடைய, உங்கள் துணைவியுடன் சொர்கத்திலாவது சேர என் மனமார்ந்த பிரார்த்தனைகள்.
{mosimage}