Balakumaran
Typography

கடிகைநான் படித்த பாலகுமாரனின் முதல் சரித்திர நாவல் (புதினம் என்று எழுதனுமோ?) - 'கடிகை'. அந்த காலத்தின் குருகுலத்தை, கல்வியிலும், ஆட்சியிலும் அந்தணர்கள் செலுத்திய ஆதிக்கத்தை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தும் புத்தகம் இது. சரித்திர ரீதியாக எவ்வளவு உண்மை என்று ஆராயாமல் 'கடிகை'யை அந்த காலத்து வாழ்வின் Documentation என்ற மட்டில் ஏற்றுக்கொண்டால் மிக அற்புதமான அனுபவம். கிட்டத்தட்ட கல்கியின் 'பொன்னியின் செல்வனுக்கு' parallel-ஆக பயணிக்கிறது இந்த கதை. 'பொன்னியின் செல்வனில் வந்த அருண்மொழிய்ம், ஆதித்த கரிகாலனும், குந்தவையும், வந்தியத்தேவரும், ரவிதாஸனும், வீரபாண்டியனும் இந்த புத்தகத்தில் வருகின்றனர். ஆனால் அவர்களில் சிலர் Negative Characters-ஆக வருகின்றனர். பொன்னியின் செல்வனை தீவிரமாக நேசிப்பவர்களுக்கு 'கடிகை' பிடிப்பது சற்று கடினமே.

'கடிகை' என்றால் கல்லூரி. அந்த காலத்தில் சேர நாட்டில் காந்தளூர்சாலை என்ற கடிகை பரசுராமர் வழி வந்த அந்தணர்களால் நடத்தி வரப்பட்டது. அந்தணர்கள் என்றால் வேதம் ஓதுதல், பூஜைகளில் பங்குபெறுதல் என நிற்காமல், வீரர்களுக்கு போர் பயிற்சி அளிப்பது, கிட்டத்தட்ட க்ஷத்ரியர்கள் போல வீரமாக, ஆயுத பயிற்சியென வாழ்ந்து வருகிறது இந்த அந்தணர் கூட்டம். கடிகை வளர வளர தனிமனித கருத்து வேறுபாடுகளும் வளர்கின்றது. பானுகோபரின் தலைமையில் ஒரு கோஷ்டி பிரிந்துபோய் கோட்டைபுரம் என்ற இடத்தில் கடிகை ஆரம்பிக்கின்றனர். காந்தளூர்சாலை மகாஉபாத்யாயர் சூழ்ச்சியாக நாகர்கள் (வேடுவர்கள்) மூலமாக கோட்டைபுரத்தை அழித்துவிடுகிறார். பரணை கிழவர் என்ற மூத்த உபாத்யாயர் (ஆசிரியர்) கொல்லப்படுகிறார். நிர்கதியாக பாண்டிய தேசம் வந்து சேர்ந்த அந்தணர்களுக்கு அடைக்கலம் அளிக்கிறான் வீரபாண்டியன். அரசியலிலும், கோவில்களிலும் அந்தணர்களின் கை மெல்ல மெல்ல ஓங்கி நிழல் அரசர்களாக ஆட்சி புரிகிறார்கள். இந்நிலையில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்குமிடையே போர் மூள, ஆதித்த கரிகால சோழனால் வீரபாண்டியன் கொல்லப்பட்டு, மீண்டும் அந்தணக்கூட்டம் நாடோடிகளாகிறது. தங்களை ஆதரித்த வீரபாண்டியனை கொன்ற கரிகாலனை தீர்த்துகட்டி பழி தீர்த்து, சோழ ராஜ்ஜியத்திலும் தங்கள் ஆளுகையை கடிகை கூட்டம் மெல்ல மெல்ல பரப்புவதாக இந்த நாவல் முடிகிறது.

பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு இதில் வரும் 2 நிகழ்ச்சிகளை co-relate பண்ணி பார்க்க முடியும். குறிப்பாக வீரபாண்டியன் கொல்லப்படும் நிகழ்ச்சி, ஆதித்த கரிகாலனின் கொலை என்பவை. இந்த வீரபாண்டியனின் கொலை பொன்னியின் செல்வனில் ஒரு மிகப்பெரிய backlash-ஐ நந்தினி மற்றும் ரவிதாஸன் வடிவத்தில் கொண்டுவரும். ஆனால் 'கடிகை'யில் ரவிதாஸன் வந்தாலும், நந்தினி என்ற புதிரை பற்றி ஒரு குறிப்பும் இல்லை. 'பொன்னியின் செல்வனில் வரும் ஆதித்த கரிகாலனின் கொலையும், கடிகையில் வரும் அதே நிகழ்வும் ஒன்றாக இருக்கிறது. ஒரே நிகழ்ச்சி இரு வேறு கூட்டங்களின் கண்ணோட்டங்களில் வருவது ஒரு வகையில் புது அனுபவமே.

Leave out comparisions and co-relations. கடிகையின் சிறப்புகள் என்ன? அந்த காலத்திய தமிழ் மக்களின் வாழ்க்கையை ஓரளவுக்கு அழகாக ஏட்டில் ஏற்றியிருக்கிறது இந்த 'கடிகை'. சேரர்களுக்கும், சோழ, பாண்டிய தேசத்து ஆட்சிமுறைகளில் இருந்த வித்தியாசங்கள், இந்த நாடுகளில் மக்களின் மாறுபட்ட பழக்க வழக்கங்கள் என முடிந்தவரை அழகாக வேறுபடுத்தி காட்டியிருக்கிறார். ஓரிடத்தில் 'இட்லி' பற்றிய குறிப்பு கூட வருகிறது. இயற்கையோடு இசைந்து போன அந்த காலத்து வாழ்க்கை படிக்கும்போதே நம்மை கொள்ளை கொண்டு போகிறது. மெல்ல மெல்ல அரசியலில் ஊடுருவும் சேர அந்தணர்களின் strategy சுவாரசியமாகவே இருக்கிறது. இந்த காலத்திலும் நிர்வாகம், தலைமை செயலகம் என புல்லுருவிகளாக ஊடுருவும் மலையாளிகளின் (அன்றைய சேர நாடு = இன்றைய கேரளா) பூர்வீக குணமே இது தானோ என்று Topical-ஆக யோசிக்க வைக்கிறார்.

இந்த நாவலில் பரபரப்புக்கு கோட்டைபுரம் காலியாகும் கட்டமும், பாண்டியர்களின் வீழ்ச்சியும் நிறைய பங்களிக்கின்றன. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கோட்டைபுரம் அழிக்கப்படும் கட்டம். காந்தளூர்சாலையின் மகா உபாத்யாயர் சமாதானம் பேச வந்து, பேச்சுவார்த்தைகள் முறிந்து போய் வெளியேறுவதில் இருந்து, பரணை கிழவர் கொல்லப்படும் காட்சிகள் வரை விறுவிறுப்பு. அதற்கு அவர்கள் கையாளும் உத்தி மிக வித்தியாசம். அதே போல வீரபாண்டியன் சோழ தேசத்தின் மீது படையெடுத்து தோற்கும் காட்சிகளிலிருந்து, ஆதித்த கரிகாலன் கொல்லப்படுவது வரை நல்ல விறுவிறுப்பு.

பானுகோபர் யவனர்களுக்கு பணம் கொடுபதற்காக நாகைப்பட்டணத்தில் கொள்ளையடிப்பதில் அந்த கூட்டத்தின் மீது ஆரம்பத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மரியாதை நொடியில் சுக்குநூறாகிறது. அது வரை ஆச்சாரியார் என்ற ரீதியில் மதிக்கப்பட்ட பானுகோபர், சந்தர்ப்பவாதியான சராசரி அந்தணர் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார். அதற்கு பிறகு அந்த கூட்டத்தின் நடவடிக்கைகள் வெறும் பதவிக்காக செய்யப்படும் செய்கைகளாக தோன்றுகிறதே தவிர அந்த ஆரம்ப கட்ட மரியாதை சுத்தமாக காணாமல் போய்விடுகிறது. கடைசியில் ரவிதாஸன் பழிதீர்ப்பது மட்டும் சற்று மனசை தொடுவதாக இருக்கிறது. மற்றபடி எல்லாமே பதவிக்காக எது வேண்டுமானாலும் அந்தண கூட்டம் தானே என்ற நினைப்பு தான் மிஞ்சுகிறது.

பாலகுமாரனின் மற்ற நாவல்களை போல இந்த நாவலிலும் கதைகளம் மிக அழகாக, விஸ்தீரமாக விளக்கப்பட்டு இருக்கிறது. கோட்டைபுரம் இன்னும் என் கண் முன்னேயே நிற்கிறது. இம்முறை அரசியலை கையில் எடுத்துகொண்டதாலோ என்னவோ, வழக்கமாக பாலகுமாரனை படிக்கும்போது வரும் நெகிழ்ச்சிகள், உணர்ச்சிவசப்படுதல் காணாமல் போய்விட்டது. கடிகையை படித்து முடிக்கும் போது நம் நினைவில் நிற்பது எப்படியாவது பதவியை பிடிக்க விரும்பிய அந்தண கூட்டம் மட்டுமே.

வாசகனாக எனக்கு தோன்றியது 'பாலகுமாரன் தன் core strength எனப்படும் வாழ்க்கை, வாழ்க்கை சார்ந்த அனுபவங்களையும், மட்டுமே எழுதுவது அவருக்கும், வாசகர்களுக்கும் நல்லது. சரித்திர நாவல் என்பது பாலகுமாரனின் forte அல்ல.' கடிகை வெறுமனே தேறுகிறது. மனதில் ஒட்ட மறுக்கிறது. ஒருவேளை இதில் ஊடாக வரும் 'பொன்னியின் செல்வ'னோடு ஒப்பிட்டு பார்த்ததால் இருக்கலாம். அல்லது 'பொன்னியின் செல்வன்' என் மிகவும் மனம் கவர்ந்த நாவலாக இருப்பதால் அதில் வில்லன்களாக வந்தவர்கள் இதில் நாயகர்களாக glorify செய்யப்படுவதையும், குந்தவையையும், வந்தியதேவனையும், அருண்மொழியையும் negative characters-ஆக என் மனம் ஏற்க மறுப்பதால் கூட இருக்கலாம். நான் உங்களை கடிகையை படிக்க பரிந்துரைக்கமாட்டேன், அதே சமயம் வேண்டாம் என்றும் சொல்லமாட்டேன். It just passes the muster.

About myself
Maheshwaran
Author: MaheshwaranWebsite: https://www.maheshwaran.com
I am a SAP Consultant in my late 30s, residing in the happeing IT City - Bangalore. My interests vary from reading to travelling to handicrafts to photography. My latest interest is on Body building. May be this vivid interest keeps me going in my life without getting bored.