Guest Articles
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

பொங்கல்பொங்கல் நேரத்து ஜல்லிக்கட்டு வீரம் சீசன் முடிந்து இப்போது பிப்ரவரி 14 காதல் சீசன் தொடங்குகிறது. தமிழர்களின் வாழ்க்கையில் காதலும் வீரமும்தான் எல்லாம்; சங்க இலக்கியமே சாட்சி என்று நெடுங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இன்றைய வீரம் மாட்டுடன் மோதுவதில் இல்லை. இரட்டை டம்ளர் டீக்கடைகளுடன் மோதுவதுதான் அசல் வீரம். ஜல்லிக்கட்டை வீரத்தின் அடையாளமாகக் கருதி உச்ச நீதிமன்றம் வரை சென்று மத அடிப்படையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும்படி மன்றாடி, நூற்றுக்கணக்கான இளைஞர்களைப் படுகாயத்துக்குள்ளாக்கி, வீரத்துக்கு ‘மரியாதை’ செலுத்தியிருக்கும் தி.மு.க. அரசு, காதலுக்கு என்ன மரியாதை செய்திருக்கிறது ? அல்லது செய்யப்போகிறது ?

 

காதலைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும், நிறையவே காதலித்திருக் கிறேன். என்னை விட நன்றாகக் காதலை அறிந்திருக்கக் கூடியவர் முதலமைச்சர் கலைஞர். திருமணத்துக்குப் பிறகு கூட காதலிலிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. அவருடைய அன்றைய காதலி, (தற்போது துணைவி) அவர் மனைவியிடம் நடிகை மனோரமாவால் அம்பலப்படுத்தப்பட்ட வரலாற்று நிகழ்ச்சியை அண்மையில் அவரே பொது மேடையில் நினைவு கூர்ந்தார்.

காதலின் வலிமையையும் வலியையும் அவர் அறிந்திருந்தால் போதுமா? இன்று தமிழ்க் காதலர்களின் நிலை என்ன?

ஒரு பூங்காவிலும், ஒரு கடற்கரையிலும் காதலர்களுக்கு நிம்மதியான இடம் இல்லை. சென்னை மெரீனாவில் காலம் காலமாக இருந்து வந்த லவ்வர்ஸ் வாக் எனப்படும் காதலர் பாதை என்ற உட்சாலையை, பியூட்டிஃபிகேஷன் என்ற பெயரில் ஒழித்தே விட்டார்கள்.

பதினெட்டு வயதில் தேசத்தின் ஆட்சியை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று தீர்மானிக்கும் உரிமை உள்ள நம் இளைஞர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்கும் உரிமையோ துணிச்சலோ இல்லை. காவல் நிலையங்களில் தஞ்சம் புகும் காதலர்களுக்கு உதவ வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு போடப்படுகிறது.

என்றேனும் ஒரு நாள் முற்றிலுமாக ஜாதியை ஒழிக்க ஒரே சிறந்த வழி காதல் மட்டும்தான்.எனவே ஜாதி மீறிய காதல் திருமணம் செய்வோருக்கும் அவர்கள் வாரிசுகளுக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, வங்கிக் கடன், வீட்டு வசதி என்று அனைத் துத் துறைகளிலும் தனியே கணிசமான இட ஒதுக்கீட்டை கலைஞர் கருணா நிதி அறிவிக்க வேண்டும்.

முதலில் நம் கல்லூரிப் பாடப் புத்தகங்களில் திருக்குறளின் இன்பத்துப் பாலுக்கு இருந்து வரும் நடைமுறைத் தடையை நீக்க வேண்டும். காதல் என்றால் என்ன என்று தெரியாமல், வணிக சினிமா காட்டும் வக்கிரக் காதலால் குழம்பித் தடுமாறி ஆண் பெண் உறவுகளை சிக்கலாக்கிக் கொள்ளும் நம் இளைஞர்களுக்கு உதவுவதற்காக +2 முதல் கல்லூரி வரை கல்வி வளாகங்களில் உளநல ஆலோசகர்களை அரசு செலவில் நியமிக்க வேண்டும். தொடர்ந்து தங்கள் குடும்பங்களில் காதல் திருமணங்களை ஊக்குவிக்கும் குடும்பங்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து தமிழ்நாட்டின் சிறந்த குடும்ப விருது வழங்க வேண்டும்.

இந்த யோசனைகளில் பாதியையாவது பிப்ரவரி _ 14 காதலர் தினத்தன்று அரசு ஆணையாக அறிவித்தால், நிச்சயம் அந்த வாரப் பூச்செண்டை கலைஞர் கருணாநிதிக்கே தருவேன் என்று காதல் நெஞ்சங்களின் சார்பில் உறுதியளிக்கிறேன்..