Jayakanthan
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நான் படித்த ஜெயகாந்தனின் இரண்டாவது நாவல். ஒரு வாக்கியத்தில் விவரிக்க வேண்டும் என்றால் இது ஒரு முதிர்ச்சியான & அற்பமான காதல் கதை. அற்பம்? ஜெயகாந்தனின் வார்த்தைகளிலேயே சொல்வதானால் 'காதல் மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும், அழிவதற்கும் அற்பமான காரணங்களே போதும்'. நாமெல்லாம் காதல் என்று நினைத்து செய்யும் ஆக்கிரமிப்பையும், காதலை ஏற்றுக்கொள்வது என்ற பெயரில் அந்த மனோ பலாத்காரத்தை ஏற்றுக்கொள்வதையும், அதனால் சுயத்தை இழப்பதையும், அந்த ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளாத சமயத்தில் காதலே தன்னை அழித்துக்கொள்வதையும் மிக நிதானமாக, அதே சமயம் நறுக்கு தெரித்தது போல எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட எல்லோருடைய வாழ்க்கையும் இப்படி தான் போய்கொண்டு இருக்கிறது. இந்த கொடுமையை அகற்ற முயலுவதைவிட, மானுட இயல்பேயான இதனின்றும் விலகுவதே விவேகம். இதை படிக்கும் பொறுமை இருந்தால் இந்த இளம் சமுதாயம் நிறைய விவாகரத்துகளை தவிர்க்கும்.

இந்த கதை நாடகத்துறையின் pinnacle எனப்படும் உச்சகட்டத்தில், சினிமா வளர்ந்து வந்த சமயத்தில், சுமார் 60-களின் இறுதியில் நடப்பதாக எழுதப்பட்டது. 32 வயதாகும் கல்யாணி தன் நாடக தொழிலை, அரிதாரப் பூச்சை, தன்னுடைய நாடக குழுவை மிகவும் நேசிக்கிறாள். நாடகத்தை விட்டு சினிமாவில் ஸ்டாராக வேண்டும் என்ற பெரிய கனவுகள் இல்லாமல், வாழ்க்கையை ஒரு தெளிந்த நீரோடை போல ரசித்து, ருசித்து வாழ்ந்து வருகிறாள். அவளது வாழ்க்கையில் நுழைகிறான் ரங்கா என்னும் விமரிசகன், மனைவியை இழந்தவன். சந்திப்பு காதலாகி, ரங்காவும், கல்யாணியும் திருமணம் புரிந்து கொள்கிறார்கள். ரங்காவின் மனதை அறிந்து, திருமணத்துக்கு பிறகு கல்யாணி அவனுடன் வேறு வீட்டில் தனிக்குடித்தனம் புகுகிறாள். கல்யாணியின் வளர்ந்த விதமும், ரங்காவின் சமூக அமைப்பும் வேறுபட்டு இருக்கின்றன. ரங்காவால் முழுமையாக தாம்பத்தியத்தை அனுபவிக்க முடியாததால் விவாகரத்தை முன்வைக்கிறான். கல்யாணியும் ஒத்துக்கொள்கிறாள்.


நாவலின் கதையோட்டமும், முடிவும் இந்த காலக்கட்ட வாசகர்களுக்கு மணிரத்னத்தின் "அலைபாயுதே"வை நினைவுபடுத்துகிறது. ஆனால் "ஒரு நடிகை...."-ல் சற்று சிக்கலாக, தம்பதியினரின் வளர்ப்பு முறைகள் அவர்களின் வாழ்க்கையில் பிரிவு ஏற்படுத்துவதை இயல்பாக காட்டுகிறார். மேலும் ஆதிக்கம் செலுத்தாத, ஆக்கிரமிப்பு செய்யாத அன்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதையும் ஒரு மனோதத்துவ ரீதியில் அலசுகிறார். ஆக்கிரமிப்பு செய்யும் அன்பை மட்டுமே காதல் என்றும், பக்தி என்றும் கருதி தங்கள் நிராசைகளை அறுவடை செய்துக் கொள்கிறார்கள். பலாத்காரம் செய்யாத அன்பை "பற்றற்ற" நிலைமை என்று கருதி வேறு எங்கோ அன்பை தேடும் அவலத்தை அழகாக சொல்கிறார் ஜெயகாந்தன்.

ரங்காவின் வளர்ப்பு - ஒரு சராசரி கீழ் / மத்திய வர்க்கத்தியது. ஒரு வகையில் தன் துணைவிக்கென்று தனிப்பட்ட ரசனை, ஒரு அடையாளம் இருக்கும் என்று எதிர்பார்க்காத மனநிலை. இறந்துபோன மனைவியுடனான தாம்பத்தியத்தை அவ்வப்போது ஒப்பிட்டு பார்த்துக்கொண்டு, கல்யாணியின் அபிப்பிராயங்கள், சுதந்திரம் ஆகியவற்றால் intimidate ஆகிறான். காதல் மிக அற்பமானது - கல்யாணியின் ரோஜா வளர்க்கும் பழக்கம் ஆடம்பரத்தை பறைசாற்றுவது என்கிற அற்பமான, சிறிய விவாததில் இருந்து ரங்காவின் காதல் உடைகிறது. தன் ஆக்கிரமிப்பு ஏற்கப் படாதபோது, ரங்கா தன் காதலை வாபஸ் பெறுகிறான். அவனது மனநிலையை, தடுமாற்றத்தை புரிந்துக்கொள்ளும் கல்யாணி அவனை ஆக்கிரமிக்காமல், அவன் போக்கிலேயே விட்டு, விளைவுகளை புரிந்துக் கொள்ளட்டுமே என்று விட்டுவிடுகிறாள். ஆனால் இந்த Free Hand-ஐ புரிந்துக்கொள்ளாத ரங்காவோ, கல்யாணிக்கு தன் மீது அன்பு இல்லை என்று முடிவுகட்டி விவாகரத்து என்ற drastic முடிவு எடுக்கிறான். அப்போதும் கல்யாணி அவனது முடிவுக்கு குறுக்கே நிற்கவில்லை. ஒரு வகையில் இந்த பாதிக்கப்படாத மனநிலை தான் அவளது வாழ்க்கையில் மோதல்களை, அவலங்களை தவிர்த்தது.

ஜெயகாந்தனுக்கே உரிய விலாவாரியான விவரிப்பில், இயல்பான மொழி வழக்கிலும், அதே சமயம் Dramatic-ஆக மாறாத காட்சியமைப்பிலும் இந்த நாவல் ஒரு Reader's delight. ஆரம்ப கட்ட காட்சிகளை தாண்டிவிட்டால் இந்த நாவல் முடியகூடாது என்று தோன்றும் அளவுக்கு நம் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொள்கிறது. முன்னுரையில் ஜெயகாந்தனின் வார்த்தைபடி திருமணத்தில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பை ஒரு லட்சிய மனைவியாக எப்படி சமாளிப்பாள் என்ற எண்ணத்தில் படைக்கப்பட்டதே கல்யாணியின் பாத்திர படைப்பு.

முடிவாக என்ன தான் சொல்லுகிறார் ஜெயகாந்தன்? இந்த சமுதாயத்தில் ஆண் தயவில் பெண் இருப்பதையே ஆண், பெண் இரு வர்கத்தினரும் இருப்பதையும், இந்த எண்ண ஓட்டம் மாறும்போது பிரச்சினைகளின் உருவமும் வேறுபடும். நாம் ஆக்கிரமிப்பு செய்ய விரும்புகிறோம் (எனக்காக என் மனைவி அவள் கொள்கையை விட்டுவிட்டு அசைவம் சாப்பிடுகிறாள் என்பதில் அன்பு ஏற்கப்பட்டதாக மகிழ்கிறோம்), நாமும் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதையே விரும்புகிறோம் (எனக்கு பிடிக்கலைன்னாலும் என் மனைவிக்காக நானும் மெகா சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டேன் என்று நமது அன்பை நிரூபித்ததாக மகிழ்கிறோம்). துணைவரிடம் ஏற்படுத்திய நஷ்டத்திலும், துணைவரால் ஏற்பட்ட நஷ்டத்திலும் இல்லறத்தில் / உறவில் அன்பு பூத்து குலுங்குவதாக செயற்கையாக மகிழ்கிறோம். அதே சமயம் ஆக்கிரமிப்பை ஏற்காத, ஆக்கிரமிப்பு செய்யாத அன்பை, வாழ்க்கையை நாம் குறையாகவே கருதுகிறோம். நம் வாழ்க்கை எப்போதும் நிறைவாகவே இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் நம் வாழ்க்கை எப்போதும் நிறைவாகவே இருக்கிறது என்று தோன்றும் போது, நாம் இந்த ஆக்கிரமிப்பின்மையை ஏற்றுக்கொண்டு நாம் அமைதியாக வாழ்வோம் போல...
 
ஆச்சரியமாக இந்த கட்டுரையை எழுதிக்கொண்டு இருந்த போது என் முன்னாள் நண்பன் தொலைபேசியில் அழைத்து இருந்தான். சில மாதங்களுக்கு முன்பு நான் அவன் ஆக்கிரமிப்பை ஏற்க மறுத்துவிட்டேன். அவன் தன் அன்பை நிறுத்திவிட்டான். அதற்கு பிறகு இப்போது தான் அழைத்திருந்தான். 'நண்பர்களுக்கிடையே சண்டை வந்தால் தான் அவர்கள் நல்ல நண்பர்கள். எனவே அவனுக்கும் எனக்கும் இடையே வந்த சண்டை காரணமாக எங்களுக்குள் இருந்தது / இருப்பது நல்ல நட்பு' என்றான். மேலும் நான் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதை SMS-ல் அனுப்ப சொன்னான். மீண்டும் நான் மறுத்துவிட்டேன்.

"அந்த தியரி சினிமா மற்றும் நாடக ஊடகங்கள் தோற்றுவித்த மாயை, காரணம் எனக்கு சண்டை வராத சில நெடுநாளைய நண்பர்கள் உண்டு, எங்களுக்குள் அழகான நட்பும் உண்டு. I liked the way you were but couldn't handle those 'proving' conditions like I MUST share everything with him IF I consider him as a friend. நட்பு தொடரவேண்டும் என்று விதித்திருப்பின், எந்த வித பிரத்தியேக முயற்சியும் இன்றி இயல்பாக தொடரும், ஆனால் அதற்கு சில காலம் பிடிக்கும். அதை விடுத்து அடுத்த முறை பார்க்கும்போது பழையபடி பேசவேண்டும் என்று எதிர்பார்த்தாய் என்றால் உனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்" என்றேன்.

மேலே சொன்னது போல எனக்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள். மனதளவில் மிக மிக நெருங்கியவர்கள். எந்த ஒரு விஷயமானாலும், நல்ல புத்தகம் படித்தாலும், பிடித்த இசையை கேட்டாலும், சுவாரசியமான நிகழ்ச்சிகளையும் அவர்களோடு atleast ஒரு SMS மூலமாகவேனும் பகிர்ந்து கொள்ளுவேன். எங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம், infact ஒன்றிரண்டு வந்திருக்கின்றன, உயிர் போகிற அவசியம் என்றாலொழிய அந்த வேறுபாடுகளை விவாதித்தது கூட இல்லை, அதனால் எனக்கு அவர்களிடம் எந்த சண்டையும் வந்ததில்லை. இந்த நாவல் படித்தபோது தான் யோசித்தேன் - நான் அவர்களை ஆக்கிரமிக்க விரும்பவில்லை, அவர்களும் என்னை ஆக்கிரமித்ததில்லை. அவர்களுக்கு என் மீது அன்பு உண்டு என்று எனக்கு தெரியும். ஆனால் அவர்களும் என்னை ஒருநாளும் நிரூபிக்க சொன்னதில்லை. எந்த விஷயத்திலாவது வித்தியாசங்கள் வந்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பெரிது படுத்தாமல், ஒதுக்கி வைத்துவிட்டு போய்க்கொண்டு இருப்பதே நல்லது என்பது என்பது நான் அனுபவித்தறிந்த பாடம்.

துபாயில் எனக்கு பாலாஜி விஜயராகவன் என்றொரு நண்பன் இருந்தான். எங்கள் அலுவலகத்தில் எல்லோருக்குமே தெரிந்து நாங்கள் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். இந்த சூழ்நிலையில் பாலாஜிக்கும் எங்கள் பொதுவான ஒரு நண்பனுக்கும் சண்டை வந்தது. பாலாஜியோ "என் மீது உனக்கு உண்மையான அன்பு இருந்தால் அந்த பொதுவான நண்பனுடனான உறவை முறித்துக் கொள்" என்றான். நான் அந்த ஆக்கிரமிப்பை ஏற்க மறுத்தேன். இது போல ஒரு நிபந்தனையை நான் விதித்தால் என்ன செய்வாய் என்று கேட்டதற்கு "சந்தோஷமாக அந்த மூன்றாம் நபருடனான நட்பை முறித்துக் கொள்வேன், no matter how close he is to me" என்றான். அந்த பதிலில் எனக்கு அன்பு தெரியவில்லை மாறாக ஒருவித obsession தான் தெரிந்தது. என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில மாத விவாதங்கள் / சர்ச்சைகளுக்கு முடிவாக பாலாஜி தன் அன்பை நிறுத்திக் கொண்டான். இன்றும் பலருக்கு நாங்கள் தொடர்பில் இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சிலர் நம்ப மறுக்கிறார்கள். ஆனால் என்ன செய்வது? ஆக்கிரமிப்பதும், ஆக்கிரமிக்க படுவதுமே நேசம் என்று நாம் பழகிவிட்டோம். மாறாக தன் உரிமைக்காக, கருத்து சுதந்திரத்திற்காக, ஆக்கிரமிப்பில் ஆட்படாமல் திடமாக இருப்பது அன்பு இல்லை என்று நினைக்க தொடங்கிவிட்டோம். அதனால் தானோ என்னவோ இன்றைய உறவுகளுக்கு ஆயுள் கம்மியாக இருக்கிறது.


புத்தக விவரம்:-
பதிப்பாளர்கள்:
மீனாக்ஷி புத்தக நிலையம், மயூரா காம்ப்ளெக்ஸ், 48 தனப்பா முதலி வீதி, மதுரை - 625001. போன் 2345971
பதிப்பு: ஒன்பதாம் பதிப்பு.
பக்கங்கள்: 308
விலை: ரூ. 90/-