Jayakanthan
Typography
{mosimage}'சில நேரங்களில் சில மனிதர்கள்' - எழுத்தாளர் ஜெயகாந்தனின் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். Anti-Brahminism நாவல் என்று சர்ச்சைக்கும் உள்ளானது. அதே பெயரில் படமாக்கப்பட்டு தேசிய விருதும் பெற்றது. இதை முதலில் நான திரைப்படமாகத்தான் பார்த்தேன். எனது 13ஆம் வயதில், DD-1இன் மாநில மொழி திரைப்பட வரிசையில் ஒரு ஞாயிற்றுகிழமை மதியம் பார்த்தேன். அந்த சமயம் நான் ராமாயணம், மகாபாரதம் என இதிகாசங்களை படித்து முடித்திருந்த சமயம். அதில் வந்த chauvinistic கருத்துக்களால் கற்பு, கலாச்சாரம் குறித்து ஒரு மாதிரியான அபிப்பிராயம் தோன்ற ஆரம்பித்திருந்த formative years-இல் இருந்தேன். அந்த படத்தில் லக்ஷ்மிக்கு (அதாவது கங்காவுக்கு) இழைக்கப்பட்டது கொடுமை என்று மட்டும் புரிந்தது. வேறு எதுவும் புரியவில்லை. காலப்போக்கில் எனக்கு அந்த படத்தை பற்றி நிறைய மறந்து போய்விட்டது. கடந்த வாரம் வேறு சில புத்தகங்கள் வாங்கப்போன போது இந்த நாவல் கண்ணில்பட்டு வாங்க நேர்ந்தது.


Synopsis

{mosimage}கங்கா - 17 வயதான இந்த இளம்பெண் ஒரு மழைக்கால முன்னிரவில், காலேஜ் வாசலில் ஒர் கார்-காரனால் Lift கொடுக்கப்படுகிறாள். ஆனால் அவன் அவளை island ground-க்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துவிடுகின்றான். அழுகையும் ஓட்டமுமாக வீட்டுக்கு வரும் கங்கா தன் தாயிடம் நடந்ததை கூற அவள் அதிர்ச்சியில் ஓலமிட்டு ஊரை கூட்டிவிடுகிறாள். கங்காவின் அண்ணன் அவளை அடித்து, கொட்டும் மழையில் வீதியில் வீசிவிடுகிறான். நிராதரவாக ஊராரின் கேலிப்பேச்சுக்கு ஆளாகி இரண்டு நாட்கள் தெருவில் கிடந்த கங்காவுக்கு அவள் மாமா மூலமாக ஆதரவு கிடைக்கிறது. கங்கா நன்றாக படித்து ஆபீசர் ஆகிவிடுகிறாள். காலம் அவளை இறுக்கமாக, ஆண்களை வெறுக்கும் misanthropist-ஆக மாற்றிவிடுகிறது.

கங்காவின் மாமாவும் சமூகமும் அவள் கெட்டுபோனவளாதலால் திருமணம் செய்துக்கொள்ள முடியாது என்று போதிக்கின்றனர். 'You can be a concubine to somebody but not a wife to anybody' (நீ ஒரு வைப்பாட்டி ஆகலாம், மனைவியாக தகுதியில்லாதவள்) என்று அடிக்கடி குத்திகாட்டப்பட்டு ஆண் சமூகத்தையே ஒரு வெறுப்புடன் பார்க்கிறாள். தன் மாமாவின் பேச்சுக்களால் (அவளுக்கு சாமர்த்தியம் இருந்தால் அவளை கெடுத்தவனையே கண்டுபிடித்து கல்யாணம் பண்ணி காட்டட்டும்') கடுப்படையும் கங்கா தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவனை 12 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கிறாள். அவன் இப்போது 'பிரபு இண்டஸ்ட்ரீஸ்' முதலாளி - பிரபு என்கிற பிரபாகர். தன்னை கெடுத்ததால் வந்த குற்றவுணர்ச்சி, மற்றும் தாழ்வு மனப்பான்மையுடன் தவிக்கும் பிரபுவுக்கு நல்ல தோழியாக மாறுகிறாள் கங்கா. மெல்ல மெல்ல அவன் மீது காதலும் கொள்கிறாள்.

தன்னுடைய இந்த விரக்தியான வாழ்க்கைக்கு காரணம் பிரபு அல்ல, மாறாக தன்னை சுற்றியிருந்த மனிதர்களும், தன்னுடைய கட்டுப்பெட்டி தனமான வளர்ப்பும் தான் என்ற முடிவுக்கு வருகிறாள் கங்கா. அசடான பிரபுவிடமே கசங்கி தன் வாழ்க்கையை கோட்டைவிட்ட தான் எவ்வளவு அசடு, பலாத்காரம் செய்தால் இணங்கிவிடுவேன் என்பதை உணர்ந்து தன்னை வளைக்க விரும்பிய மாமா, அரதபழசான கட்டுபெட்டித்தனமான கொள்கைகளால் பாழாகிப்போன தன் வாழ்க்கையை நினைத்து, இனியேனும் தைரியமாக தன்னம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என்று முடிக்கிறாள் கங்கா. ஆனால் நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன? பிரபு கங்காவின் எதிர்காலத்தை கருதி கனத்த மனதுடன் பிரிகிறான். படிப்பவர்களை அதிர்ச்சியடைய செய்யும் எதிர்பாராத முடிவு.

இந்த நாவலை பற்றி ஒரு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் - mindblowing. தனக்கு இழைக்கப்பட்ட ஒரு சில நிமிட கொடுமைக்காக காலம் முழுவதும் அவஸ்தைப்பட்ட கங்காவின் பரிதாப கதை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல சமூகத்தின் வக்கிரங்களை சாடுகிறார் ஜெயகாந்தன். கிட்டத்தட்ட 448 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை சம்பவங்கள் வாரியாக குறுக்கினால் 2-3 நிமிடங்களில் முடித்துவிடலாம். சற்று மிகைப்படுத்த பட்ட statement என்றாலும் - இது ஒரு matured-ஆன காதல் கதை என்றும் சொல்லலாம். ஆனால் அதை கங்காவின் பார்வையில், அவள் எண்ணங்களுடன் நிறைய விளக்கங்களுடன், தன்னை சூழ்ந்த மனிதர்களை குறித்த புரிதல்களுடன் கதையை நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார்.

Observations

{mosimage}குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் கங்கா இந்த நாவலில் முதன்முதலாக 'விபத்தை' பற்றி நினைப்பது. கொட்டும் மழையில் நனைந்து ஜுரத்தில் சாகும் தருவாயில் கிடக்கும் போது, அவளோடு வந்துவிட்ட அவள் அம்மாவின் தவிப்பும், பதைபதைப்பும். படித்து ஒரு வாரம் ஆனபின்பும் கண்ணை மூடினாலே அந்த நிகழ்ச்சி கண்முன் தோன்றி மனதை பிசைகிறது. அதே போல இதன் முடிவும் பின் கதையும். கனவிலும் கற்பனை பண்ணி கூட பார்க்க முடியாதது.

நம் நாட்டில் நடுத்தர வர்கத்தின் chauvanist (ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயம் என்னும் இரட்டை நிலை) அல்லது voyeuristic (மீண்டும் மீண்டும் பலாத்காரத்தை பற்றி பேசி, மனதுக்குள் உருவகபடுத்தி பார்த்து இன்பம் காணும் வக்கிர குணம்) கண்ணோட்டமும், அதனாலேயே பாதிக்கப்படும் பெண்களின் நிலையும், நினைக்கும் போதே... just disgusting. இன்றும் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு தினசரிகளில் வெளிவருவது 'அழகி'கள் படமும், பெயரும் மட்டுமே. உடன் படுத்த 'அழகன்'கள் உலகத்துக்கு வெளிப்படுத்த படுவதில்லையே? பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணை 'கற்பிழந்தவள்' என்ற பெயரிடுவதே மிகப்பெரிய அபாண்டம், அநீதி etc.. etc.. 'கற்பு' என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம், கற்பிழப்பது என்பது சுயபுத்தியுடன் எல்லை தாண்டி தவறான உறவு கொள்வது. ஆனால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பரிதாபப்பட்ட ஜீவன்களை 'கற்பிழந்தவள்' என்று பட்டம் கட்டி, காலத்துக்கும் அந்த கொடுமையில் வாழவைப்பதை படம்போட்டு காட்டுகிறார். உதாரணத்துக்கு காயப்பட்ட கங்காவுக்கு ஆறுதல் சொல்லி நடந்த கொடுமையிலிருந்து மீள வழிசெய்யாமல், for no fault of hers அவளை அடித்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, கொட்டும் மழையில் வீதியில் வீசும் அவள் அண்ணனின் செய்கை. இங்கு பலாத்காரம் செய்தவனை விட அவள் அண்ணனுக்கு தான் தண்டனை அதிகம் தரவேண்டும்.

மேலும் அந்த பெண்களை ஆண் சமூகம் ரகசியமாக தங்கள் காம இச்சைகளை தீர்த்துக்கொள்ளும் வடிகாலாக பயன்படுத்தும் கொடுமையும் நடப்பதுண்டு. கங்காவுகுக்கு அவள் மாமா படிக்கவைத்து வேலைக்கு போகும் அளவுக்கு ஆதரவு தந்தாலும், காந்தியின் Quote-க்கு (உன்னை பலாத்காரம் செய்யும் நேரத்தில் உனக்கு நான் அஹிம்சையை போதிக்கமாட்டேன். ஆயுதம் இல்லையென்றால் என்ன? உன் நகங்களும், விரல்களும் உன்னை பாதுகாத்துக்கொள்ளும் ஆயுதங்கள்) அவள் அடிக்கோடிட்ட அந்த சிகப்பு வரியே இவளுக்கு மாமாவிடமிருந்து லக்ஷ்மண ரேகையாக பாதுகாப்பு அளித்திருந்தது. நன்றியுணர்ச்சியே அவரின் பலமாக போய்விட்ட அவலம். கங்காவை தடவியும், கிள்ளியும் பலாத்காரத்தை பற்றி இருபொருள் பட கிளுகிளுப்பாக பேசி அவளை படிய வைக்க முயலும் அவள் மாமா, அந்த சமயத்தில் நன்றி காரணமாக ஒன்றும் பேசமுடியாமல் அவமானத்தில் புழுங்கி கண்ணீர் உகுக்கும் கங்கா. வார்த்தைக்கு வார்த்தை 'கெட்டுப்போனவள் மனைவியாக லாயக்கில்லாதவள்' என்று சொல்லி அவளை மனதளவில் demoralise செய்து மட்டம் தட்டி வைக்கும் அண்ணன் என நடுத்தர வர்கத்தின் கற்பு நிலைகளை அதன் அவலங்களை சுருக்கென்று ஏற்றுகிறார் ஜெயகாந்தன்.

அதே நேரம் பெண் பிள்ளைகளை கட்டுப்பாடு என்ற பெயரில் நடுத்தரவர்க்கம் ஆண் பிள்ளைகளிடம் பழகவிடாமல் பிரித்து வளர்ப்பதின் ஆபத்தை சித்தரிக்கிறார் ஆசிரியர். பிரபு அந்த 'சம்பவத்தை' குறித்து கூறும்போது 'நீ முதலில் தடுத்திருந்தால் நான் விலகியிருப்பேன், எனவே அது என்னை பொறுத்தவரை பலாத்காரம் இல்லை, எனவே நடந்ததற்கு நான் பொறுப்பேற்க முடியாது' என்கிறான். அந்த நிகழ்ச்சியை கங்கா மீண்டும் நினைத்து பார்க்கையில் 'ஒரு கணம் சிலிர்ப்பில் நான் தடுக்காததை இவர் சம்மதம் என்று எடுத்துகொண்டார். ஒருவேளை என் மீது கையை வைத்தவுடனேயே நான் Sorry, let me get down' என்று இறங்கியிருக்கலாமோ?' என்று தடுமாறுகிறாள். மேலும் 'எவன்கிட்டே வேண்டுமானாலும் ஒரு பெண்ணுக்கு சிலிர்ப்பு ஏற்படுவது தான் ஒழுக்கமின்மை என்று எனக்கு தோன்றுகிறது. எனக்கு யார்கிட்டே வேண்டுமானாலும் இந்த நாணமும், த்ரில்லும் ஏற்படும் என்பதை என் மாமா அந்த காலத்திலேயே புரிந்து வைத்துகொண்டது தான் என்னை பற்றி அவருக்கு அவ்வளவு கேவலமான கணிப்பு ஏற்பட்ட காரணம்' என்று நொந்துகொள்கிறாள். பின்பு மஞ்சு - ஸாம்ஜி உறவு மூலம் ஆண் - பெண் நட்பை நடுத்தர வர்க்கம் பயந்து, மிரட்டியே காதலாக்கி கனிய வைத்துவிடுவதை காண்பிக்கிறார்.

அடுத்து நம் மனதில் நிற்பது இதில் வரும் கதாபாத்திரங்களின் தனிமையும், அதன் கொடுமையும். தனிமையில் வாழ்பவர்களின் மனதில் இடைவிடாது நடைபெறும் போராட்டங்களும், அது தாண்ட தூண்டும் எல்லைகளும். பலாத்காரம் செய்தவனை காதலிக்கும் தமிழ் பட நாயகிகளிடமிருந்து ஒரு வித dignity-யுடன் மாறுபட்டு நிற்கிறாள் கங்கா.

Conclusion and Trivia

Above all யாருடைய புரிதலுக்கும் அப்பாற்பட்ட உறவுகளும், சம்பந்தபட்டவர்களுக்கு மட்டுமே உணரகூடிய கண்ணுக்கு தெரியாத கட்டும். மிக விஸ்தாரமாக, நிதானமாக இருவரின் உறவும் பலப்படுவது சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கிறது. முடிவில் 'அவர் என்னுடையவர், நான் அவரை காதலிக்கின்றேன்' என்று கங்கா திருமண ஏற்பாட்டை மறுப்பது விகல்பமின்றி ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது.

தனக்கு நடந்த கொடுமையை நம்பிக்கையுடன் சொன்ன தாயே அதை தம்பட்டம் அடித்து ஊருக்கு சொல்லி தன்னை சந்தி சிரிக்க வைத்து பின்பு தனக்கு துணையாக வீட்டைவிட்டு வெளியேறியதும், தனக்கு ஆதரவு தந்த 'உயர்ந்தவராம்' மாமா தன் அத்தையை கேவலமாக நடத்தியதும், தன்னை அவருடைய இச்சைக்கு பணியவைக்க முயன்றதும், தன்னை பலாத்காரம் செய்த பிரபுவே பின்பு தன்னை தன் மகள் போல பாசமாகவும், நெருக்கமாகவும் நடத்தியது என... சில நேரங்களில் சில மனிதர்களின் நடவடிக்கைகள் கங்காவை ஆச்சரியம் அடைய வைக்கிறது. இவை எல்லாவற்றையும் மீறி முடிவான 'பின் கதை'யில் நடக்கும் நிகழ்ச்சிகள்... அதுவே இந்த கதையின் தலைப்பாகவும் மாறுகிறது.

Spoiler: திரைப்படத்தின் முடிவும், புத்தகத்தின் முடிவும் வேறு வேறு. புத்தகத்தில் 'பின் கதை' என்ற அத்தியாயத்தில் ஒரு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது. அது படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். In fact இந்த அத்தியாயத்திலே தான் இதன் தலைப்பு 'சில நேரங்களில் சில மனிதர்கள்'க்கு முழு அர்த்தமும் கிடைக்கிறது.

முதலில் இதை திரைப்படமாக பார்த்துவிட்டதாலோ என்னவோ எனக்கு படிக்கும் போது கங்காவாக 'லக்ஷ்மி'யையும், பிரபுவாக 'ஸ்ரீகாந்த்'தையும், அம்மாவாக சுந்தரிபாயும், மாமாவாக பிரபல நாடக நடிகர் 'நீலு'வையும், மஞ்சுவாக 'இந்திரா'வையும் உருவகபடுத்திகொண்டேன்.

{mosimage}முதலில் ஜெயகாந்தன் 'அக்னி பிரவேசம்' என்ற பெயரில் ஒரு சிறுகதை எழுதியிருந்தாராம். அதில் மழை நாளில் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கங்கா தன் தாயிடம் வந்து சொல்லி அழும்போது, அவர் சாமர்த்தியமாக மறைத்து அந்த பெண்ணுக்கு தைரியம் சொல்லி எண்ணை குளியல் நடத்தில் இதை அக்னிபிரவேசமாக நினைத்து சுத்தப் படுத்திக்கொள் என்று முடித்திருந்தாராம். இந்த நாவலிலும் இதே 'அக்னி பிரவேசம்' என்ற கதை ஒரு சர்ச்சைக்குறிய அம்சமாக, கங்காவின் தாய் அதை படித்துவிட்டு இப்படி செய்திருக்கலாமோ என்றும், அவள் மாமா இந்த கதை தவறான அர்த்தம் கொண்டது என்று மனு சாஸ்திர நீதியை சொல்வதாகவும், மஞ்சு படித்துவிட்டு இதுபோன்ற அசட்டு பெண்கள் இருக்கமாட்டார்கள் என்றும் பலதரப்பும் வித்தியாசமாக react செய்வதாக வருகிறது.

அந்த காலத்தில் இந்த சிறுகதை மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியதாம். அதன் எதிரொலியாக ஜெயகாந்தன் அதனை extend செய்து, முடிவு அவ்வாறாக இல்லாமல், எதிர்ப்புகள் போலவே கங்காவின் தாய் react செய்திருந்தால் / அதன் முக்கிய பாத்திரங்கள் பின்னொரு நாளில் சந்தித்தால், என்னவாகும் என்று யோசித்ததின் விளைவு தான் இந்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. இந்த நாவல் சாகித்ய அகாடெமி விருது பெற்று, இதை அடைந்த இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமை ஜெயகாந்தனுக்கு கிட்டியது. (முதல் எழுத்தாளர் மறைந்த திரு, 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி)

இது 1976-இல் திரைப்ப்டமாக எடுக்கப்பட்டு, A. பீம்சிங் இயக்கிய 'சில நேரங்களில் சில மனிதர்கள்' வணிகரீதியாகவும் வெற்றி பெற்றதாம். அதில் கங்காவாக நடித்த லக்ஷ்மி தேசிய விருது பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற புகழையும் பெற்றார்.
About myself
Maheshwaran
Author: MaheshwaranWebsite: https://www.maheshwaran.com
I am a SAP Consultant in my late 30s, residing in the happeing IT City - Bangalore. My interests vary from reading to travelling to handicrafts to photography. My latest interest is on Body building. May be this vivid interest keeps me going in my life without getting bored.