Balakumaran
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உள்ளம் கவர் கள்வன்'உள்ளம் கவர் கள்வன்' - இம்முறை சேலம் போகும்போது அதிர்ஷ்டவசமாக சென்ட்ரலில் உள்ள 'ஹிக்கின்போத்தம்ஸ்'-ல் கிடைத்தது. இதற்கு முன்பு 3 முறை இதே புத்தகத்தை வாங்கிவிட்டேன். ஒவ்வொரு முறையும் யாராவது வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். நானும் நல்ல புத்தகம் என் நினைவாக இருக்கட்டும் என்று விட்டுவிடுவேன். கடந்த முறை எனக்கென்று வாங்க 'விசா பதிப்பாளர்களுக்கே' போனபோது 'out of print' என்றார்கள். அடுத்த பதிப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை என்றார்கள். அப்போது நொந்து நூடில்ஸாகி போய் முடிவு செய்தேன் - இனி எனக்கென்று ஒரு பிரதி வைத்துக்கொண்டு தான் மற்றவர்களுக்கு எந்த புத்தகத்தையும் விட்டுத்தருவது என்று. அதனால் தான் என் அக்கா கேட்டபோது கூட தராமல் 'டிமிக்கி' கொடுத்துவிட்டேன். நான் சொல்ல வந்தது - இந்த புத்தகத்தை பற்றி வந்த வித்தியாசமான விமரிசனங்கள். எனது மாமாவும், அம்மாவும் சொல்லிவைத்தது போல இந்த நாவல் குப்பை என்று விமர்சித்தார்கள். நான் சொன்னேன் "நீ இதை முதல் முதலில் 20 வயதில் படித்திருந்தால் பிடித்திருக்கலாம் ஆனால் 60 வயதில் படித்ததால் இதன் nuances எனப்படும் நுணுக்கங்கள் புரியாமல் போயிருக்கலாம்

 

Page 1

இந்த நாவல் நந்தினி வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்வதில் ஆரம்பிக்கிறது. அவள் பார்வையிலே கதை நகர்வதால் அது நியாயப்படுத்த படுவது போல காட்சிகள் அமைந்திருக்கிறது. இந்த ஆரம்பம் பெரியவர்களுக்கு சற்று அதிர்ச்சி அளிக்கிறது போலும். அந்த அதிர்சியில் அவர்களால் நாவலின் underlying subtleties-ஐ கவனிக்க முடியவில்லை போல. இந்த நாவலை 7/8 முறை படித்திருப்பேன், நிச்சயம் அதற்கு குறையாமல் தான். ஆனால் ஒவ்வொரு முறையும் எனக்கு புதிதாக இருக்கிறான் இந்த பாலகுமாரனின் கள்ளப் பையல். Infact இந்த பெயரே ஒரு கவிதை, மிக அழகாக சூட்டப்பட்ட தலைப்பு. ஞானசம்பந்தரின் தேவார பாடலில் வருகிறது -

'தோடுடைய செவியன் விடை
யேறியோர் தூவிண்மதிசூடி
காடுடையசுடலை பொடி பூசி யென்
உள்ளம் கவர் கள்வன் '

ஸ்வாமியை யாராவது திருடன் என்பார்களா? மனசை திருடுவது என்றால் என்ன? தெரியாமல் ஆக்கிரமித்து கொள்வதா? நேசிப்பது தெரியாமல் நிறைந்துகொள்வதா? சம்பத்... என் இனிய சம்பத்... நீ இவ்விதம் தானே செய்தாய்? இது நந்தினி காதல் வயப்பட்டு பேசுவதல்ல. சம்பத் மருத்துவமனையில் கிடக்கும்போது அவனை அன்புடன் நினைவுகூர்வது. இந்த தலைப்பில், காமத்தை விட, இன்பத்தைவிட ஒரு ஆழமான அன்பு தான் நிறைந்திருக்கிறது. இந்த நாவலின் முதல் தளம் - காமத்தை தாண்டி, பிரதிபலனை தாண்டி குடிகொண்டிருக்கும் அன்பு.

இந்த நாவலின் இரண்டாவது தளம் - 'பொருளாதாரம்'. In contrary to popular belief, ஒரு தேசத்தின் காதல் இலக்கியம் அந்த நாட்டின் பொருளாதாரத்தின் வெளிப்பாடு. பொருளாதாரம் செழிப்பாக உள்ள நாட்டிலே தான் காதலும் செழித்து வாழும். காதலிப்பவர்களுக்கு ஒருவர் மற்றவர்களுக்கு பாரமாக தோன்றாமல் இருக்க, வாழ்க்கையில் யுத்தத்தை ஜெயிக்க இருவரும் இணைந்து போரிடவேண்டியது அவசியமாகிறது. பொருளாதார சுதந்திரம் மேலிடுகையில் ஒரு தன்னம்பிக்கை மிளிர்கிறது. ஓரிடத்தில் நந்தினி சொல்கிறாள் - "காசு இல்லாம காதல் மூச்சு முட்ட கூடாது. நீ தானே லவ் பண்ணினே, நீயே கஷ்டப்படுன்னு புருஷனை விரட்டுறது பாவம். என் புருஷனுக்கு உடம்புக்கு முடியலைன்னா ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போற தெம்பு எனக்கு வேண்டும்'. இந்த பொருளாதார சுதந்திரம் வரும் வரை காத்திருக்க, ஒரு வேலைக்கு போக படிப்பை முக்கியமாக கருதும் நந்தினி. பாவம் இந்த நாவலை படித்த பல பெரியவர்கள் இந்த பாயிண்டை கோட்டை விட்டு விடுகிறார்கள்.

உள்ளம் கவர் கள்வனின் மூன்றாவது தளம் - உடனிருப்பது. காதலிப்பவர்கள் இனிய கணங்களை பகிர்ந்து கொள்வதையே பிராதனமாக நினைக்கின்றனர். கஷ்டமான சமயத்தில் உடனில்லாத போது தங்கள் துணை அவசியப்பட்ட நேரத்தில் கூட இல்லை என்று வருத்தபட்டோ, அவசியமான தருணங்களில் நாம் கூட இல்லாமல் நம் கடமையிலிருந்து தவறிவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியுடன் வாழவோ கூடும். இதில் ரமேஷ் சொல்வது போல 'இது போல ஒரு வேதனையில் சம்பத்தின் உடம்பு உனக்கு அறிமுகமாயிருக்க வேண்டாம். ஆனா இது போன்ற சங்கடமான நேரத்தில் ஒருத்தரை ஒருத்தர் நிதானமாக புரிந்து கொள்ளுங்கள்'. ஆனால் பொருளாதாரம் முக்கியம், எனவே படிப்பும் வேலையும் முக்கியம் என்றிருந்த நந்தினி, சம்பத்துக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்தில், தன்னுடைய presense இன்றியமையாதது, மற்றும் unsubstitutable என்று உணரும் சமயத்தில் தன்னுடைய படிப்பு தடைபட்டாலும் பரவாயில்லை என்று திருமணத்தை பகிரங்கமாக உலகத்துக்கு அறிவித்து பிறந்த வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

Page 2

இதன் அடுத்த தளம் - காதலர்கள் பரஸ்பரம் வைத்திருக்கும் மரியாதை. பாரதியின் அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் நடத்தும் 'பாரத மாதாவாக', மனோன்மனியம் சுந்தரனாரின் '

பூமியினும் பொறை மிக்குடையாள் பெரும்
புண்ணிய நெஞ்சினள் தாய் எனில்
தோழிசைப் பார்முன் நின்றிடுங்காற் கொடுந்
துர்கையாணவள் தாய்'

என காதலிக்கும் பெண்ணை துர்க்கையாக, காதலின்பால் தன்னை அழித்துக்கொள்ளும் ஆணின் தவறை வாஞ்சையாக, திடமாக, இதமாக சுட்டிக்காட்டும் பெண்ணாக, அவளுள் கறைந்து அவளுக்கு மகனாக பிறக்க விரும்பும் மரியாதை. நந்தினி சம்பத்தை 'உள்ளம் கவர் கள்வன்' என்று சிவபெருமானாக, 'யாரடா நீ பாலகா?' என்று ராசலீலை ஆடும் கண்ணனாக என்றும், சம்பத் அவளை 'துர்கை, பாரத மாதா, தமிழன்னை' என்று இருவரும் பரஸ்பரம் கொண்டாடும் தெய்வ நிலை. இந்த segment முழுவதும் நிறைய இலக்கிய பாடல்களாக வந்திருப்பதால் சிலர் பக்கங்கள் தாவி மேலோட்டமாக படிப்பதால் இதுவும் விடுபடக்கூடிய ஒரு பாயிண்ட்.

அனைத்தையும் தாண்டி முக்கிய பாத்திரமல்லாத ரமேஷின் மனைவி மூலமாக சொல்லப்படும் செய்தி - 'உறவுகளில் போலித்தன்மை இல்லாத மேன்மை நிலை'. தாலியையும் தாண்டி அன்பால் கட்டப்பட்டிருக்கும் கண்ணுக்கு தெரியாத பிணைப்பு. நந்தினி உங்கள் கணவரை போல நீங்களும் மற்றவர்களை சைட் அடித்தால் அவர் என்ன சொல்வார் என்று கேட்பதற்கு ஒரு அழகான பதில் வருகிறது. 'தாலின்னாலும் தழைய தழைய தானே கட்டிக்கிறோம், மூச்சு முட்ற மாதிரி இல்லையே?' எந்த உறவிலும் மற்றவர்களுக்கு ஒரு breathing space எனப்படும் அவர்களுக்கான விருப்பு வெறுப்புகளை மதித்து செய்ய அனுமதிக்கும் நம்பிக்கை கூடிய சகிப்புத்தன்மை. இதுவும் ஒரு flash போல வந்து போய்விடுவதால் சமயத்தில் கவனிக்க படாமல் போய்விடுகிறது. அதுபோல காதல் என்பது காத்திருப்பது என்று ஒரு தவறான எண்ணம், காத்திருத்தல் உறவுகளை பலவீனப்படுத்தும் என் சம்பத்தின் தந்தை சாடுவதும் எத்தனை பெரியவர்கள் கவனித்தார்களோ தெரியவில்லை.

அத்தனைக்கும் மேலே இதில் வரும் காதல் காட்சிகள்.... கடவுளே! அவ்வளவு கிறக்கம் படிக்கும் போதே. சம்பத் தன் காதலை நாசூக்காக வெளிப்படுத்தும் காட்சி - 'ராஜாவை குணப்படுத்த ஏழு மலை, ஏழு கடல் தாண்டி மூலிகை கொண்டு வர்ரவன் என்ன கேட்பான்?', அதை தொடர்ந்து வரும் சில பக்கங்களும் எத்தனை முறை படித்தாலும் அலுக்காதவை. எந்த சூழ்நிலைக்காக 'தன்னிலவு நீரிரைக்க..' பாடல் எழுதப்பட்டதோ, மனோன்மணீயம் சுந்தரனாரும், பாரதியாரும் எதை உத்தேசித்து எழுதினார்களோ, இந்த பாலகுமாரனின் புத்தகத்திற்கு மிக பொருத்தமாக இருக்கிறது.

மிக மேலோட்டமாக பார்த்தால் இது வழக்கமான மசாலாவான, திருப்பங்களுடைய மூன்றாம் தர காதல் கதை போல பெரியவர்களுக்கு தோன்றியதில் ஆச்சரியம் இல்லை. ஒருமுறை என் நண்பர் வைத்தி சொன்னார் - 'The outcome of extreme complexity is the simplicity'. மேலோட்டமாக எளிமையானதாக தோன்றும் எந்த ஒரு பொருளும், உற்று நோக்கினால் மிக complex-ஆக இருக்கும். 'உள்ளம் கவர் கள்வனும்' இந்த வகையை சேர்ந்த்தே. இதன் complexity-யை உணர்ந்தவர்கள் இதை போற்றுகிறார்கள், மற்றவர்கள் இதை ஒரு cheap love story என்று ஒதுக்கி தள்ளிவிடுகிறார்கள்.

புத்தக விவரம்:-
பதிப்பகத்தார்: விசா பதிப்பகத்தார், நெ. 16, பழைய எண். 55, வெங்கட்நாராயணா சாலை, தி. நகர், சென்னை - 600 017. போன் - 044-24342899, 24387696, This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
பதிப்பு: ஒன்பதாம் பதிப்பு
பக்கங்கள்: 184
விலை: ரூ. 60/-