Yandamoori Virendranath
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எண்டமூரி விரேந்திரநாத்சமீபத்தில் கல்லூரியில் சேர்ந்த என் அக்காவின் பெண் தன்னுடைய கண்டிப்பான பெண்கள் கல்லூரியை பற்றியும், 'காய்ந்து' கிடக்கும் வயசு பெண்களை பற்றியும் புலம்பி தீர்த்துவிட்டாள். மேலும் சில சுவாரசியமான தகவல்களையும் (பெண்கள் எப்படி சோப்புக்குள் மொபைல் ஃபோன்களை பதுக்கி வைத்து பாய் ஃப்ரெண்டுகளுடன் ரகசியமாக பேசுகிறார்கள், தினசரிகளில் வரும் ஆண்களின் உள்ளாடை விளம்பரங்களை அறையில் ஒட்டிக்கொள்ள நடக்கும் போட்டிகள், பார்வையாளர்களாக வரும் ஆண்களோடு கடலை போடுவது....) தந்தாள். அதனாலோ என்னவோ என்னால் இந்த நாவலை புரிந்து படிக்க முடிந்தது. 'லேடீஸ் ஹாஸ்டல்' - பேரே கொஞ்சம் கிளுகிளுப்பாக இருக்கிறதே கதை எப்படியிருக்கும் என்று முன்னுரையில் பார்த்தபோது, இது கிரிக்கெட்டும், சைக்காலஜியும் கலந்த கலவையென்று போட்டிருந்தது. கிரிக்கெட் தேர்வில் நடக்கும் அரசியலும், வழி தவறும் கல்லூரி பெண்களும் விவாதிக்கப்படும் இந்த கதை ஒரு கொலையின் பின்புலத்தில் நடக்கிறது. இந்த கொலையின் முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் பாதையில் கிரிக்கெட் வாரிய அரசியல், பெண்கள் கல்லூரி விடுதியில் நடக்கும் அவலங்கள் என நிறைய தகவல்கடு நகர்கிறது இந்த கதை.

ராயன்னா - கிரண்மயி (நாவல் தெலுங்கில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கபட்டிருப்பதால் இந்த ஆந்திர வாடை) திருமணம் முடிந்து முதலிரவு நடக்கும் போது ஆரம்பிக்கிறது. எண்டமூரி Opening எல்லாம் நல்லா தான் குடுக்கிறார், ஆனால் finishing-இல் தான் சற்று நாடகத்தனமாக தடுமாறியிருக்கிறார். காதல் 'கிளைமாக்ஸ்' நெருங்கும் முன்பாக, அபூர்வாலக்ஷ்மி என்ற பெண்ணை கொலை செய்ததற்காக நள்ளிரவில் போலீஸாரால் ராயன்னா கைது செய்யப்படுகிறான். சில மணி நேரங்களே அறிமுகமான தன் கணவனுக்காக களத்தில் இறங்குகிறாள் கிரண்மயி. அவள் 'சைக்காலஜி' படித்தவள் என்பதால் முதலிரவில் அவர்களிடையே நடைபெறும் உரையாடல் சுவாரசியமாகவே இருக்கிறது. ராயன்னா கைது செய்யப்படுவதில் இருந்து ஜாமீனில் வருவது வரை நடக்கும் நிகழ்ச்சிகள் படு வேகம், உண்மையிலேயே த்ரில்லிங்காக இருக்கிறது. ஒரு கட்டத்தில் ராயன்னா தான் கொலையாளியோ என்று நமக்கே சந்தேகம் வருகிறது.

பிள்ளைகளின் வளர்ப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது 'டீன் ஏஜின் கடைசி பருவம்'. அவர்கள் மனதளவில் குழந்தைகளாக இருந்தாலும், சமுதாயம் பெரியவர்களாக நடத்துகிறது. அந்த வயதில் வரும் கிளர்ச்சியும், கிடைக்கும் நட்பும், குறிப்பாக திடீரென கிடைக்கும் சுதந்திரம் பலருடைய வாழ்க்கையை திசை திருப்புவன. இந்த phase-இல் கெடாமல் போனால், காலத்துக்கும் ஒழுக்கமாக இருக்கலாம். 80% கதை பெண்களின் விடுதியில் நடப்பதுவாக இருப்பதனால் நிறைய தகவல்கள் கிடைக்கிறது, அதில் பல திகிலூட்டுவன, பல எச்சரிக்கை செய்பவை. நாவலின் இந்த பகுதியில் அபூர்வாலக்ஷ்மி என்னும் நல்ல பெண், குடும்பத்தின் மீது பாசம் வைத்திருக்கும் பெண்ணுக்கு அந்த அளவுக்கதிகமான அன்பே அவளை வழி தடுமாற வைப்பது பெண்ணை பெற்ற பல பெற்றோர்களுக்கு ஒரு பாடம். கடைசியில் அந்த பெண்ணின் கொலை நம் மனதில் பாரத்தை ஏற்றிவைத்தாலும், அந்த பெண் சற்று எச்சரிக்கையாக இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

ஹாஸ்டலில் துப்பறியப்படும் காட்சிகளில் நிறைய பெண்களின் பெயர்கள் வருவதால், சரியாக நினைவு வைத்துக்கொள்ள முடியவில்லை. எனினும் என்ன நடந்திருக்கும் என்று நம்மால் எளிதாக யூகித்து, புரிந்துகொள்ள முடிகிறது. கிரண்மயியின் பார்வையில் கதை நகர்வதால் அந்த பெண்களின் நடவடிக்கைகளுக்கு உளவியல் ரீதியாக விளக்கமும் அளிக்கப்படுகிறது. அதே சமயத்தில் இது போல பொறுப்பில்லாத, போக்கிரி பெண்கள் விடுதி எங்கேனும் இருக்குமா என்ற சந்தேகமும், பயமும் இருக்கிறது. இந்த விடுதியில் வரும் கிட்டத்தட்ட எல்லா பெண்களும் கன்னித்தன்மையை இழந்திருப்பவர்கள், கருக்கலைப்பு செய்திருப்பவர்கள், 'lesbian' ஆக மாறியிருப்பவர்கள். ஆளுக்கொரு உளவியல் ரீதியாக காரணம் சொல்லியிருந்தாலும், படிக்கும் பெற்றோர்களின் வயிற்றில் நிச்சயம் புளி கரைக்கும். இதை balance செய்யும் விதமாக ராயன்னாவும், கிரண்மயியும் 'எல்லா ஹாஸ்டலும் இப்படி இருக்காது' என்று பேசுவதாக முடித்து வைக்கிறார்.

சில குறிப்பிடப்படவேண்டிய பாடங்கள்:- தங்களுக்கு பிடித்த பிரபலங்களை இந்த பெண்கள் பிரமிப்புடன் அணுகுவதும், அதே பிரமிப்பினாலேயே பாலியல் ரீதியாக exploit செய்யப்படுவதையும் ஓரளவுக்கு யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் எண்டமூரி விரேந்திரநாத். முதல் முதலாக காதலில் விரக்தியுறும் பெண்கள் பழிவாங்கும் விதமாக முன்னாள் காதலனின் நண்பர்களுடன் நெருங்கி பழகி, அவர்களோடு படுக்கையில் விழுந்து தான் 'உபயோகபடுத்தப்பட்டு' விட்டோம் என்பதை உணரும் போது காலம் கடந்துவிடுகிறது. ஒரு உறவுக்கு பழி / மாற்று உடனடியான அடுத்த உறவு அல்ல, கவனம் தேவை என்பதை சற்று அழுத்தமாகவே சொல்கிறார்.

ராயன்னாவின் பாத்திரப் படைப்பு சற்று இயல்பாக இருக்கிறது. கிரண்மயி ஒரு 'ideal Super woman' போல சித்தரிக்கப்பட்டு இருக்கிறாள். அதனாலே அடுத்தடுத்து முடிச்சுகள் அவிழும் போது ஒரு சுவாரசியமும் இல்லை. அபூர்வாலக்ஷ்மியின் தந்தை பாத்திரம் சற்று நேரமே வந்தாலும் நம் பரிதாபத்தை அள்ளிக்கொள்கிறது. சொல்லப்போனால் புத்தகத்தை மூடி வைத்து வெகு நேரத்துக்கு ஒரு வலி ஏற்படுத்துவது இந்த பாத்திரமே. குற்றவாளி வெளிப்படும்போது சற்று ஆச்சரியமாக இருக்கிறது. அதுபோல ஆரம்பத்தில் பயமுறுத்தும் இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா பாத்திரம் அந்தரத்தில் விடப்படுகிறது. ஆனால் மற்ற குற்றவாளிகள் scot free-யாக நடமாடும்போது ஒரு வித ஏமாற்றமே மிஞ்சுகிறது என்ற போதிலும் உண்மையில் எல்லோரும் மாட்டிக்கொள்வதில்லை என்று உறைக்கிறது.


சமீபத்தில் பெண்ணை ஹாஸ்டலுக்கு அனுப்பி வைத்திருக்கும் & இளகிய மனமுடைய பெற்றோர்கள் படிக்காமல் இருப்பது நலம். மீறி படித்தால் தங்கள் நிம்மதியை அடகு வைப்பது நிச்சயம். அதே சமயத்தில் அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு பாடமாக, எச்சரிக்கை மணியாக விளங்குகிறது இந்த 'லேடீஸ் ஹாஸ்டல்'. கடைசியில் கொலை துப்பறிவு, கிரிக்கெட் தேர்வு என எல்லாத்தையும் புறந்தள்ளிவிட்டு மனதில் நிற்பது வயது பெண்களின் தடுமாற்றங்கள் தான். சற்று பிசகினாலும் மஞ்சள் புத்தகமாக மாறிவிடக்கூடிய ஆபத்தோடு, கத்தி மேலே நடப்பது போல கவனமாக கடந்து சாதித்திருக்கிறார் எண்டமூரி விரேந்திரநாத். படிக்கும்போது சற்று crude-ஆகவே தோன்றினாலும், உண்மை சுடும் என்பதை உணரும்போது, இந்த நாவல் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கிறது.

பதிப்பாளர்கள்: அல்லயன்ஸ் கம்பெனி, 244, ராமகிருஷ்ணா மடம் சாலை (மயிலை தெப்பக்குளம் எதிரில்), மயிலாப்பூர், சென்னை - 04. போன்: +91-44-24941314
பக்கங்கள்: 320
விலை: ரூ. 70/-