Yandamoori Virendranath
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
எண்டமூரி விரேந்திரநாத்'பவித்ரபந்தம்' என்று பெயர் வைத்திருந்தால் சற்று வழக்கமானதாக இருந்திருக்குமோ என்னவோ, எண்டமூரி விரேந்திரனாத்தின் தெலுங்கு நாவலான 'அநைத்திகம்'-இன் தமிழ் மொழிபெயர்ப்புக்கு 'பந்தம் பவித்ரம்' என்று கொஞ்சம் வித்தியாசமாக பெயர் வைத்திருக்கிறார் கௌரி கிருபானந்தன். 1998-இல் எழுதப்பட்ட இந்த நாவல் பிரபல திரைப்படமான 'அமோரெஸ் பெரெஸ்' மூலம் பிரபலமான 'segmented screenplay' முறையில் எழுதப்பட்டுள்ளது. (இதே திரைக்கதை யுக்தியில் மனிரத்னத்தின் 'ஆய்த எழுத்து' 2001-ல் வெளியானது). 3 கதாபாத்திரங்கள் தங்களது கண்ணோட்டத்தில் நிகழ்வுகளை நமக்குரைத்து, முடிவில் ஒரு பொதுவான நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து ஒரு முடிவுக்கு வருவது இந்த style திரைக்கதை யுக்தி. பந்தம் பவித்ரமும் ஷியாமலா, அகல்யா, ராக்காயி என்று சமுதாயத்தின் வெவ்வேறு தளங்களில் இருந்து வந்த மூன்று பெண்களின் perspective-இல் விரிந்து, கடைசியில் ஒன்றாக ஒரு தெளிவான முடிவுக்கு வருகிறது. எண்டமூரியின் வழக்கமான எழுத்துக்களில் இருந்து 'U turn' எனப்படும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் பயணிக்க தயாராவோம்.

எழுதியது ஆணாயினும், மற்ற 'so called' பெண்ணிய எழுத்தாளர்களின் படைப்புக்களை விட மேலாகவே இருக்கிறது. காரணம் என்னவென்று பார்த்தால் பெண் எழுத்தாளர்கள் தங்கள் பிரச்சினைகளை 'objective' எனப்படும் பாரபட்சமற்ற பார்வையில் பார்க்க முடியாமல் போவதாக இருக்கலாம். கூடவே பெண்ணுக்கு எதிரி ஆணே என்ற கடிவாளம் கட்டப்பட்ட பார்வையாக இருக்கலாம். மேலும் தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முயலும் வழிகள் மேலும் சிக்கலை கூட்டுவதை acknowledge செய்ய மறுப்பதும் ஒரு காரணம்.எந்த பூமிப்புள்ளியிலிருந்து வந்தாலும், சமுதாய தட்டிலிருந்து வந்தாலும், பெண்ணுக்கு பிரச்சினைகள் இருக்கும், ஆனால் அதன் ஆழம் ஆட்களின் பார்வையில் வேறுபட்டது என்றும் தெளிவாக்குகிறார் எண்டமூரி விரேந்திரனாத்.

லண்டனில் வாழும் புகழ்பெற்ற பெண் வக்கீலான ஷியாமலாவுக்கு, தீவிரமாக பெண்ணிய இயக்கங்களுக்கு ஆதரவாக வாதாடும் அவளுக்கு, தனது தாயின் extramarital எனப்படும் திருமணத்திற்க்கு வெளியே உறவு இருந்ததை அறிந்துகொண்டு தனது தந்தையை பார்க்க இந்தியாவிற்கு புறப்படுகிறாள். வாழ்க்கையில் அடுத்த வேளை உணவுக்கும், விரும்பியதை செய்யும் வசதியும், சுதந்திரமும் கிடைக்கப்பெற்ற ஷியாமலாவுக்கு, இன்னும் ஆண்கள் பெண்களை அடிமைபடுத்தவே பிறந்திருக்கின்றார்கள் என்ற எண்ணம். பெண்ணியவாதிகள் தங்கள் ஆற்றலை வெறும் விவாதத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆக்கப்பூர்வமாக செலவழிக்கவேண்டும் என்று வாதாடிய சுரேஷை திருமணம் செய்ய மறுத்துவிடுகிறாள்.

அகல்யா புகுந்த வீட்டில் ஒட்டமுடியாமல் தவிக்கும் பெண். அவளது 'manipulative' மாமியாரை மீறி எதுவும் செய்ய முடியாமல், கணவனின் ஆதரவும் இன்றி சிறைபட்டதாக புழுங்கும் அகல்யாவுக்கு, அவளுடைய PhD படிப்பும், அதோடு இணைந்த ஆசிரியர் தொழிலும் சற்று புத்துணர்ச்சியை கொடுக்கிறது. கல்லூரியையும் ஷேர் அறிவையும் தனது பிரச்சினைகளிருந்து திசைதிருப்பியாக பயன்படுத்திக்கொள்ளும் அகல்யாவை, அதுவே திருமணத்திற்கு வெளியே உறவு ஏற்படுத்திக்கொள்ள வைக்கிறது. தனது அறிவையும், பட்டப்படிப்பையும் மெச்சும் தனது மைத்துனருடன் உடலுறவு ஏற்படுத்திக்கொள்கிறாள் அகல்யா. படிப்பில் பட்டங்கள் பெறும் அகல்யா, வாழ்க்கையின் ஆரம்ப பாடத்திலேயே தோல்வியுறுகிறாள்.

தலித் குலத்தில் பிறந்த ராக்காயி, திடமான அறிவும், குறிக்கோளும் இருந்தபோதும் வாயளவில் பெண்ணியம் பேசும் மகேஷிடம் ஏமாறுகிறாள். புரட்சி என்கிற பெயரில் கல்யாணம் செய்யாமல் இரண்டு வருடங்கள் குடித்தனம் நடத்தி பின்பு அந்த பந்தத்தில் இருந்து வெளியேறுகிறாள்.

இந்த மூன்று பெண்களுக்கும் உறவை ஏற்படுத்தி ஒரு கோர்வையை கொடுக்கிறார் எண்டமூரி. ஷியாமளா அகல்யாவின் மகள். ராக்காயி அகல்யாவுக்கு அண்ணியாக வருகிறாள். இவர்களை தவிர அகல்யாவின் சிறிய ஓர்படியாக வரும் பெண்ணும், ராக்காயியின் அக்காவும் முறையே அகல்யா மற்றும் ராக்காயியின் மனசாட்சியாக, முக்கிய முடிவெடுக்க வைக்கும் கிரியா ஊக்கிகள்.

எண்டமூரி விரேந்திரநாத் இந்த பெண்களின் முறை தவறிய உறவுகளை எந்த விததிலும் நியாயப்படுத்தவில்லை. மாறாக அவர்கள் அந்த உறவில் விழுந்த சூழலையும், தவறுக்கு தீர்வு தவறான உறவுகள் இல்லை என்பதை கற்பிக்கிறார். என்ன தான் அன்பு, அங்கீகாரம், ஆறுதல் தேடி இந்த கள்ள உறவுகளை ஏற்படுத்திக்கொண்டாலும், கடைசியில் அவை வலியையும், அவமானங்களையும் மட்டுமே மிஞ்சும் என்று யதார்த்தமாக விவரிக்கிறார். அகல்யாவும், ராக்காயியும் பொருளாதார சுதந்திரம் தங்களுடைய பிரச்சினைகளில் பாதி தீர்த்துவிடும் என்று நம்புகின்றனர். அவர்களுக்கு தவறுகள் மட்டுமே கண்களுக்கு தெரிந்திருக்கிறது. எதை செய்யவேண்டும் என்பது புரிய சில பாதிப்புகளும், நிறைய நேரமும் தேவைப்பட்டது.

இந்த நாவலில் திருமணம் என்ற பந்தத்தை ஒரு நுண்ணோக்கியின் அடியில் வைத்து அறிவியல் பூர்வமாக அலசுகிறார் எண்டமூரி. திருமண பந்தம் என்பது புனிதமானது என்று கண்மூடித்தனமாக ஒத்துக்கொண்டு, அதன் நிறை குறைகளை அலசாமல் விடவேண்டியது இல்லை, ஆனால் எந்த ஒரு பந்ததை போல தடுமாற்றங்களும், வேலி தாண்டும் சந்தர்ப்பங்களும் கொண்டது. அதை வெற்றிகரமாக்க சம்பந்தப்பட்ட இருவரும் உழைக்கவேண்டியது அவசியம்.

ஆண் பெண் உறவுக்கு சமுதாயம் கட்டுபாடுகளை ஏற்படுத்தியிருப்பதை சற்று லாஜிக்காக விவரிக்கிறார். 'இரண்டு மனிதர்களுக்கிடையே நட்பு வளர எண்ணங்களிலும், தொழிலிலும் ஒற்றுமை இருக்கவேண்டும். ஆனால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நட்புக்கு இவை எதுவும் தேவையில்லை. வெறும் இனக்கவர்ச்சியே போதும். சமுதாய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த நெருக்கம் மனதளவில் நின்றுவிடும். சமுதாயம் சில கட்டுபாடுகளை விதித்திருப்பதே இதற்கு தான். இஷ்டம் போல வாழ்வதும், நெறிமுறைகளை மீறுவதும் தான் சுதந்திரத்தின் வெளிப்பாடு என்று நினைத்து குற்ற உணர்ச்சியே இல்லாமல் வாழ்வது ஒரு வகை. ஆனால் அதுபோலொரு நெறியற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே தங்களை நல்லவர்களாக வெளியுலகத்திற்கு காட்டிக்கொள்வது கேவலம் என்று சாடுகிறார்.

கணவனின் சொல்படி, கணவனின் குடும்பத்தினருக்கேற்றபடி வாழ நிர்பந்திக்கும் ஆணாதிக்கம் படைத்த சமுதாயம் தான் தன் பிரச்சினைகளுக்கு காரணம் என்று நினைக்கும் அகல்யா, வேறொரு ஆணிடமே நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தனது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்தது வேடிக்கை எனில், தனது பிறந்த, வளர்ந்த சூழ்நிலை எல்லாம் அறிந்த ராக்காயி உதட்டளவில் பெண்ணியம் பேசிய ஆணிடம் கல்யாணமே செய்யாமல் தன்னை இழந்தது பரிதாபத்திகுறியதே. பெண்கள் தங்கள் பிரச்சினைகளுக்கெல்லாம் ஆண் இனமே காரணம் என்று கருதுகின்றனர். ஆண் என்பவன் சமுதாயத்தில் தன்னை போல ஒரு அங்கம் மட்டுமே என்பதை மறந்துவிடுகின்றனர். சொல்லபோனால் தங்கள் பிரச்சினைகளுக்கு காரணம் தாங்களே என்பதை உணர மறுக்கின்றனர். பலநேரம் பெண்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபட ஆணின் துணை அவசியம் என்கிற கசப்பான உண்மையையும் முன்னிறுத்துகிறார். ராக்காயிக்கு மகேஷ் மூலம் பிரச்சினைகள் பெரிதாகும்போது, சாதுரியமாக அவளுக்கு விவாகரத்து பெற்று தருவது ஒரு ஆண் இன்ஸ்பெக்டர், moral support தருவது ஸ்ரீகாந்த் தான்.

என் சொந்த அனுபவத்தில், எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி, இல்லத்தரசி, தன் பிள்ளைகளை ஒன்றுமே செய்யவிடமாட்டார், குறிப்பாக தன் பையனை. சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை என்பதே அவர் வாதம். சாப்பிட்ட தட்டை கழுவ விடமாட்டார், உள்ளாடைகளை கூட அலசிபோட விடமாட்டார். இவன் போன்ற பிள்ளைகள்க்கு பெண் என்பவள் துணி துவைக்க, சமைக்க பயன்படும் கருவி. பெண்களை இளக்காரமாக கருதும் இவனை இப்படி மாற்றியதில் முழு பங்கும் அவன் தாய்க்கு தான். வளர்க்கும்போதே தான் செய்யும் வேலையின் மதிப்பை அவனுக்கு உணர்த்தியிருந்தால், அவன் பெண்ணை மதிப்பவனாக வளர்ந்திருப்பான்.

மேலும் அந்த பெண்ணுக்கே தன்னை பற்றி ஒரு சுயமரியாதை இல்லை. வேலைக்கு போகாத காரணத்தினால் தன்னை மதிக்காமல் போய்விடக்கூடாதென்று அந்த பெண் இந்த வேலைகளை செய்வதாக கூறினார். நாளைக்கு மகனுக்கு கல்யாணம் நடந்த பின்னும் தன் 'நிலை'யை காப்பாற்றிக்கொள்ள விருப்பமில்லாமல் வயதான காலத்திலும் வேலைக்காரியாக வாழக்கூடும்.

இந்த நாவலை மிகவும் யதார்த்தமாக, superficial முடிவுகள் எதுவும் இன்றி முடிக்கிறார் ஆசிரியர். பெண்ணுரிமை சங்கங்கள் பிரச்சினைகளை பற்றி பேசுவதோடு மட்டும் நில்லாமல், தீர்வுகளை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ வேண்டும். பாதி பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெண்களிடமே உள்ளது. சுயமரியாதை பாதிக்கப்படும் பட்சத்தில், பெண்கள் தளைகளை உடைத்தெறிந்துகொண்டு வெளியே வரவேண்டும். விவாகரத்து மட்டுமே தீர்வில்லை என்ற போதிலும், விவாகரத்தினை அவமானமாக கருதி துன்பங்களை சகித்துக்கொண்டு இருக்ககூடாது. குறிப்பாக சுதந்திரமாக இருப்பது என்பது தன்னிச்சையாக, திருமணம் செய்துக்கொள்ளாமல் தனியாக இருப்பது அல்ல, சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்க முடிவது.

மொத்ததில் பெண்களுக்காக பெண்களைவிட யதார்ததமாக பேசும், ஆண் எழுதிய 'பெண்ணிய நாவல்' இந்த பந்தம் - பவித்ரம். 1998-ல் தொடராக எழுதப்பட்ட இந்த நாவல், இந்த கருவின் புரட்சித்தனத்தை கருதி 2025-ல் நடப்பதாக எழுதப்பட்டது. ஆனால் 2007-லேயே மிகவும் சமகாலத்தியதாக (contemporary) இருக்கிறது. இத்தனை புரட்சியாக எழுதினாலும், பயந்து போயோ அல்லது தயங்கியோ எதிர்காலத்தில் நடப்பதாக எழுதிய எண்டமூரி விரேந்திரநாத்தின் (சிறு) கோழைத்தனத்துக்கு ஒரு கொட்டு.

பதிப்பகத்தார்: அல்லயன்ஸ் கம்பெனி, 244, ராமகிருஷ்ணா மடம் சாலை, மைலாப்பூர், சென்னை - 600 004.
பக்கங்கள்: 320
விலை: ரூ. 70/-