Sujatha
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இரண்டாவது காதல் கதைஇது வைத்தியிடம் இருந்து தொற்றிக்கொண்ட பழக்கம். ஏதெங்கிலும் பயணத்தின் நினைவாக புத்தகங்கள் வாங்கி அந்த பயணத்தை பத்திரப்படுத்துவது. இந்த முறை கோவை சென்றபோது சென்ட்ரலில் உள்ள ஹிக்கின்போத்தம்ஸில் வாங்கியது சுஜாதாவின் 'இரண்டாவது காதல் கதை'. இதன் நடை சுஜாதாவின் 'அனிதாவின் காதல் கதை'யை ஒத்திருந்தாளும், இம்முறை கதையின் களம் Board Room Politics-ல் மையம் கொண்டுள்ளது. வாழ்க்கையை பட்டாம்பூச்சியை போல சிறகடித்துக்கொண்டு மகிழ்ச்சியாக நடமாடிக்கொண்டிருக்கும் நிதியின் வாழ்க்கையில் காதல் நுழைகிறது, கூடவே எதிர்ப்புக்களும். வாழ்க்கையை போல கட்டுப்பாடான ஆசானும் இல்லை. நிதியின் வாழ்க்கையில் இரண்டாம் காதல் நுழைகிறது. வழக்கமான தனது விறுவிறுப்பான நடையில், சுஜாதாவின் முத்தியரையோடு ஜிவ்வென பறக்கிறது இந்த 'இரண்டாவது காதல்'.

 

Page 1

நிதியின் தந்தைக்கு சந்தேகம் வரும் வகையில் ஒரு நாள் காலையில் ஒரு blank call வருகிறது. அவரின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவதை போல நிதி அவளது செல்ல 'டம்போ'வுடன் காதலில் இருப்பது தெரிகிறது. அவளது விருப்பத்துக்கு எதிராக பெங்களூரை சேர்ந்த குமாருடன் திருமணம் நிச்சயிக்கப் படுகிறது. நிதியின் காதலன் திருமணத்துக்கு தயாராக இல்லாததால் நிதி குமாரை மணக்க சம்மதிக்கிறாள். இந்த நிகழ்ச்சி அவளது பெண்மையின் மென்மையை ஓரங்கட்டிவிடுகிறது. தனது வாழ்க்கையை தன் கையில் எடுத்துக்கொள்ளும் நிதி, அதை நேர்படுத்த முயற்ச்சிக்கிறாள்.

எனக்கு சுஜாதாவிடம் மிகவும் பிடித்தது அவரது நேரடியான எழுத்துக்கள், without any pretense or pretext. அவருடைய பாத்திரங்கள் இலக்கிய நடையில் யோசிக்க மாட்டார்கள். மனதிலிருந்து யோசிப்பதைவிட புத்தியிலிருந்து யோசிப்பவர்கள். எனவே அவர்களுடைய நடவடிக்கைகளில் ஒரு வேகம் இருக்கும், அதை படிக்கும்போதே நமக்கு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இந்த முறை அவர் எடுத்துக்கொண்டுள்ள பின்புலம் Boardroom Politics எனப்படும், நிர்வாக பிரச்சனைகளும், அதை சார்ந்த நிகழ்வுகளும். Shares மற்றும் Board of Directors, இவர்களது நடவடிக்கைகளும், அவை கம்பெனியின் செயல்திறனில் ஏற்படுத்து தாக்கங்களும், எளிய தமிழில், எந்த ஒரு சாமானியரும் புரிந்துக்கொள்ளும் வகையில் கதையை நகர்த்திகொண்டு போய் இருக்கிறார்.

பொத்தாம் பொதுவாக பார்த்தால் இது 'பூவொன்று புயலான' கதை தான். தான் தெளிவாக முடிவெடுக்காத காரணத்தால், தன் தந்தை தேர்ந்தெடுக்கும் கயவனுக்கு வாழ்க்கைப்படும் நிதி, இனி மூலையில் அழுதுகொண்டு அமர்ந்திருப்பதில் பயனில்லை என்று தன் தந்தைக்கு எதிராக Board Room-ல் களம் இறங்குகின்றாள். அந்த மெல்லிய பெண் புலியாக மாறும் பரிமாற்றம் மிக நேர்த்தியாக, convincing-ஆக சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு வகையில் இந்த நாவல் எழுதப்பட்ட காலக்கட்டத்தை வைத்து, இதை ஒரு coming of the age novel என்று சொல்லலாம். சுஜாத நிதியை தன்னுடைய 'பிரிவோம் சந்திப்போம்' நாயகியுடன் ஒப்பிட்டு கால மாற்றத்தை விளக்குகிறார்.

கதையில் நிதியின் பாத்திரம் மிகவும் பலமாக அமைந்துள்ளது. ஆனால் என்னை பொறுத்தவரை இயல்பாக அமைந்தது என்றால் அது நிதியின் தந்தை கதாபாத்திரம் தான். ஒரு சராசரியான தந்தையை, அந்த பணக்கார பகட்டை, அடிபட்டவுடன் சீறும் சிங்கம் போல தன் மகளிடம் மோதுவதை மிக நேர்த்தியாக படைத்து நம் கண் முன் உலாவ விட்டிருக்கிறார் சுஜாதா. இந்த கதையின் மிகவும் பலவீனமான பாத்திரப் படைப்பு என்றால் அது குமார் தான். அசத்தலான அறிமுகத்தோடு சரி, பிறகு ஒரு சொத்தையான வில்லனாக அடிபட்டு சாமார்த்தியத்திலோ அல்லது வில்லத்தனத்திலோ சோபிக்காமல் போய்விடுகிறான்.

நிஜ கதா நாயகன் என்றால் அது சுஜாதா தான். மனிதர் வேகத்தை எழுத்துக்களில் கலந்துகட்டி, நம்மை புத்தகத்தை கீழே வைக்க முடியாமல் செய்து விடுகிறார். நான் பொதுவாகவே ஒரு நாளைக்கு 40-50 பக்கங்களுக்கு மேலே படிப்பதில்லை என்று வைத்திருக்கிறேன். காரணம் தினமும் படிக்கவும், படித்ததை அசைபோடவும், நான் வேகமாக படிக்கும் பழக்கத்துக்கு ஒரு வேகத்தடை போட்டு வைத்து இருக்கிறேன். ஆனால் வெகு சில புத்தகங்களுக்கு இந்த கொள்கை தளர்த்தல் நடக்கும். இந்த 'இரண்டாவது காதலு'க்கும் கொள்கை மீறல் நடந்தது. இந்த அத்தியாயத்தோடு மூடி வைக்கலாம், இன்னொன்று மட்டும் என்றே நான் கிட்டத்தட்ட முழு வீச்சில், ஒரே மூச்சில் முடித்துவிட்டேன்.

Page 2

பலவீனம் என்று பார்த்தால், இரண்டாவது காதலும், அனிதாவின் காதல்களும் நிறைய ஒத்துப்போகின்றன. பாதிவரை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாத்திரப்படைப்புக்கள் - carefree பெண்கள் முரட்டு உலகத்தை எதிர் நோக்க தயாராவது. ஆனால் அனிதாவை விட நிதிக்கு தைரியமும், மன உறுதியும் அதிகம்.

என்னிடம் சமீபத்தில் யாரோ கேட்டார்கள் - 'உனக்கு சுஜாதா மற்றும் பாலகுமாரனில் யாரை பிடிக்கும்? யார் சிறந்தவர்?' என்ன சொல்வது? ஒவ்வொரு துறையிலும் diametrically opposite எனப்படும் முற்றிலும் மாறுபட்ட சிந்தனைகள் கொண்ட இருவர் பிரபலமாக விளங்குவது இயல்பு. திரையுலகில் ரஜினியும், கமலும் போல, இசையுலகில் இளையராஜாவும், ஏ.ஆர். ரகுமானும் போல இரு வேறு school of thoughts முன்னணியில் இருப்பார்கள். அது போல தான் தமிழ் எழுத்துலகில் சுஜாதாவும், பாலகுமாரனும். சுஜாதாவின் நடை முன்பு சொன்னது போல எந்த ஒரு அலங்காரமும் இல்லாமல், raw-வாக, நேரடியாக விஷயத்துக்கு வருவதாக இருக்கும். அவருடைய கதை களங்களும், கதாபாத்திரங்களும் உணர்ச்சிகளை பின்னுக்கு தள்ளிவைத்துவிட்டு சற்று materialistic-ஆக, practical-ஆக இருப்பார்கள்.

பாலாவின் எழுத்துக்களும், perspective எனப்படும் வெளிப்பார்வையும் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும். பாலகுமாரன் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருவார். அதனாலேயே அவரது கதாபாத்திரங்கள் நிறைய பேசும் - மற்றவர்களுடனோ அல்லது தனக்குள்ளேயோ. பாலாவின் கதைகளமும் ஒரு கதாபாத்திரமாக பரிமளிக்கும். அவருடைய 'இரும்பு குதிரைகள்'இல் லாரிகளும், அந்த சந்தும் மிக அழகாக அந்த பாத்திரங்களுடன் இழைந்திருக்கும், 'ரகசிய சினேகிதி'யில் அந்த மருத்துவமனையும், உபகரணங்களும் மூல கதாபாத்திரங்களை மிக அழகாக நெருக்கி கொண்டுவரும். ஆனால் சுஜாதாவின் களங்கள் பின்புலத்தோடு நின்றுவிடும். அதில் ஏதேனும் ஒரு relevant technical aspect முன்னுக்கு நிற்கும். உதாரணத்திற்கு அனிதாவின் காதல்களில் Share Trading, இரண்டாவது காதலில் Boardroom Politics, தீண்டும் இன்பத்தில் Aids மற்றும் Inter Country Adoption எனப்படும் தத்து கொடுப்பது தொழிலாக இயங்குவது... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

எனவே எனக்கு இந்த இரண்டு பேரையுமே பிடிக்கும். ஆனால் இந்த இருவரின் கலவை என்று நான் கருதுவது 'எண்டமூரி' விரேந்திரனாத் என்னும் தெலுங்கு எழுத்தாளரை. மனிதர் திகில், காதல், புதிர், ஆளுமை மேன்மை என பல்வேறு தளங்களிலும் புகுந்து விளையாடுகிறார். சமீபத்தில் தான் அவரது புத்தகங்களை மொத்தமாக அள்ளமுடிந்தது.

இரண்டாவது காதல் விவரங்கள்:-
பதிப்பாளர்: திருமகள் நிலையம், 16 வெங்கட் நாராயணா சாலை, தி. நகர், சென்னை - 17, போன்: 044-24342899
பக்கங்கள்: 232
விலை ரூ. 87/-