Indhira Sounderrajan
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Kaatru Kaatru Uyirஇந்த முறை முன்னுரையில் இந்திரா 'பலவீனமான இதயமுள்ளவர்கள் இந்த நாவலை படிக்க வேண்டாம்' என்று ஒரு வரி எழுதியிருக்கலாம். இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய 'காற்று காற்று... உயிர்' நாவலை படிக்கும் நீங்கள் ஆவியுலகில் நம்பிக்கையற்றவராக இருக்கலாம், ஆனால் இதை படிக்கும் அந்த தருணங்களில் ஒரு வித பரபரப்பும், மெல்லிய உடல் நடுக்கங்களும் வந்து ஒட்டிக்கொள்வதை தவிர்க்க இயலாது. எண்டெமூரியின் 'துளசிதளம்' நாவலுக்கு பிறகு நான் பயந்து நடுங்கி படித்த த்ரில்லர் இது. மீண்டும் சொல்கிறேன், இதை படிக்கும்போது நீங்கள் அதை உருவகப்படுத்தி கொள்வதிலேயே இதன் வெற்றி அடங்கி இருக்கிறது. அதற்கு நீங்கள் நல்ல கற்பனை வளம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் கற்பனைகளை இந்திராவின் எழுத்துக்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அது போதும். ஆன்மீக பின்புல நாவல்களை எழுதி பெயர் வாங்கிய இந்திரா இந்த ஆவி நாவலின் மூலம் புதிய எல்லைகளை தொட்டிருக்கிறார். இது தேவி வார இதழில் 40 வாரங்களாக வெளிவந்து தமிழ் நாட்டை கட்டிப்போட்ட தொடராம்.


மதுரையின் புற நகர் பகுதியில், கண்ணில் ஏகப்பட்ட கனவுகளுடன் புது வீட்டை கட்டி விடிந்தால் கிரகப்பிரவேசம் என்கிற நிலையில் சரவணனை ஆட்கொள்ளுகிறது ராஜேந்திரனின் ஆவி. இருபத்தி நான்கு வயதில் வாழ்வை வாழ ஆசைப்பட்ட தன்னை கொன்றவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் வெறியுடன் கிளம்பும் (சரவணனில் உடம்பில் இருக்கும்) ராஜேந்திரனை அப்பாவி சரவணனின் தம்பி பாஸ்கரும், சரவணனின் முறைப்பெண் கார்த்திகாவும் மந்திரக்கார கிழவி காடம்மையுடன் சேர்ந்து மீட்டுக்கொண்டு வருவதே 'காற்று காற்று... உயிர்'-இன் சாராம்சம்.

நம்புங்கள்... இதன் முதல் பன்னிரண்டு அத்தியாயங்களை படிக்க எனக்கு 3-4 நாட்கள் பிடித்தது. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு படிக்க ஆரம்பிக்கும்போது இரவு 10:30 - 11:00 ஆகிவிடும். என் ரூம் மேட் ஊரில் இல்லாததால் தனியாக இருந்தேன். முக்கால் வாசி இரவின் இருட்டு மடியில் நடக்கும் இந்த நாவலை உருவக படுத்திக்கொள்ளும் போதே என்னுள் மெல்லிய பயம் நுழைந்துக்கொள்ளும். சில பக்கங்கள் படித்தவுடனேயே வீட்டுக்குள்ளே யாரோ உலாத்துவது போல இருக்கும், பட்டென மூடி வைத்து விடுவேன். பிறகு காலைகளில் உணவு உட்கொள்ளும்போது சிறுக சிறுக படித்தேன். இது வழக்கமான 'வாய்மையே வெல்லும்' பாணியில் அமைந்த, மிக எளிதில் யூகிக்கக்கூடிய முடிவுடன் அமைந்த கதையாயினும், தன்னுடைய திகில் நடை எழுத்தில் இந்திரா பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

முன்பே சொன்னதுபோல நீங்கள் ஆவி நம்பிக்கையற்றவராக இருக்கலாம், ஆனால் விறுவிறுப்பை ரசிப்பவராக இருந்தால், இந்த நாவலை கீழே வைப்பது மிகவும் கடினம். லாஜிக் எல்லாம் பார்க்காமல், கதை ஓட்டத்தோடு நீங்கள் நின்று கொடுத்தாலே போதும். குறிப்பாக இந்த கதை ஆரம்பிக்கும் விதம் படு வேகம் என்றால் ஆவி உட்கொண்ட சரவணனின் (ராஜேந்திரனின்) பாவங்களும், அந்த restlessness-ம், மிருகத்தன்மையும் விவரிக்கப்பட்ட விதம் உங்கள் ரத்ததை உறையும் நிலைக்கு கொண்டுபோவது உறுதி. கதை களம் மயானங்களிலும், ஊரை விட்டு ஒதுக்குப்புறங்களிலும், பின்னிரவுகளில் அமைந்திருப்பது தேவையான திகில் பின்புலத்தை உருவாக்கியிருக்கிறது.

இந்த நாவல் ஆவி நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு அறிவியல் பூர்வமான விளக்கங்கள் அளிக்கவில்லை என்பது பலவீனங்கள் என்ற போதும், படிக்கும் போது நம்மை கேள்விகள் கேட்க விடாமல், நம்முடைய கவனத்தை குவித்து இருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் ஆவிகள் சம்பந்தப்பட்ட தகவல்களை அளித்து, வாசகர்களை அந்த மன நிலைக்கு சாமர்த்தியமாக கொண்டுசென்றிருக்கிறார் இந்திரா. வேண்டிய அளவுக்கு மட்டும் கதாபாத்திரங்களை உருவாக்கி (சுவாரசியத்திற்காக மிக பலமுள்ள கெட்டவன் என்று யாரும் இல்லை), மீதி இடங்களை தன்னுடைய வர்ணனைகளால் நிரப்பி இதை ஒரு 'spooky thriller'-ஆக வெற்றிகரமாக முன்னிறுத்தியிருக்கிறார். Infact நேற்றிரவு இந்த அனுபவத்தை எழுதுபோதே யாரோ என் பின்பு நிற்பது போல ஒரு உணர்வு.

வெகு விரைவில் இந்த நாவல் ஏதேனும் ஒரு சானலில் தொடராக வரலாம், ஆனால் இந்த நாவலை விட சுவாரசியமாக இருக்க முடியாது. ம்ம்.. சில மாதங்களுக்கு முன்பு 'அது மட்டும் ரகசியம்' என்ற தொடரின் 1 அத்தியாயத்தை பார்த்தேன். அதே பெயரில் இதே இந்திரா எழுதிய நாவலின் திரைபதிப்பு என்ற போதிலும், பல மாதங்களுக்கு தொடரை இழுக்க வசதியாக கதா நாயகனின் இறந்து போன மனைவி மீண்டும் அவதாரமாக வருவது போல மாற்றி குதறி வைத்து இருந்தார்கள். ஒரு வேளை இந்த 'காற்று.. காற்று.. உயிர்' தொடராக தயாரிக்கப்பட்டாலும், இந்த அபத்தங்கள் நிகழலாம். என்வே புத்தக பதிப்பை மட்டுமே படியுங்கள்.

காற்று.. காற்று.. உயிர் - இந்திராவின் மகுடத்தில் மற்றுமொரு மாணிக்க கல்.

பதிப்பகத்தார்: திருமகள் நிலையம், 16, வெங்கட் நாராயணா சாலை, தி. நகர், சென்னை-17. போன்: 044-24342899
பக்கங்கள்: 336
விலை: ரூ. 90/-