Indhira Sounderrajan
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சில புத்தகங்களுக்கு முன்னுரையை படிக்காமல் இருப்பதே நல்லது. இது நான் இந்திரா சௌந்த்தர்ராஜனின் 'சிவம்' என்ற நாவலை படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றியது. காரணம் அவர் தேவை இல்லாமல் ஒரு பலமான பீடிகையை போட்டுவிட்டு, ஒரு 'hype' உருவாக்கிவிட்டு அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றமுடியாமல் தடுமாறியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஒரு வேளை முன்னுரையை படிக்காமல் நேராக நாவலை படிக்க ஆரம்பித்து இருந்தால், சுவாரசியமாகவே இருந்திருக்கும். இந்திராவின் பலமே அவரது 'ஆன்மீக த்ரில்லர்கள்' என்று அழைக்கப்படும், கோவிலின் பின்புலத்தில் எழுதப்பட்டும் மர்மங்களும், முடிச்சுக்களும். அவரது வழக்கமான பிரியப்பட்ட 'மரகதலிங்கம்' இருந்தாலும், இம்முறை அவர் அதிலிருந்து சற்று விலகி இராம நாராயணன் பாணியில் முழு நீள பக்தி த்ரில்லரை தந்திருக்கிறார். போனஸாக அவர் லிங்கங்கள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன்பு அளித்திருக்கிறார்.

 மரகதலிங்கம் புதூர் - இது தான் கதை அமைந்துள்ள களம். NRI ராஜ் நாராயணனின் வருகையில் தொடங்குகிறது கதை. தன் அத்தை மகள் பாரதியை மணக்க வரும் ராஜனுக்கு அந்த ஊரில் பல மர்ம அனுபவங்கள் கிடைக்கின்றன. அவனால் அந்த கோவிலில் இருந்து புராதன கால மரகத நடராஜர் சிலை வெளியுலகிற்கு வருகிறது. பின்பு தீய சக்திகளுக்கும், அந்த சிலையை காப்பாற்ற நினைக்கும் உள்ளங்களுக்கும் இடையே நடப்பது தான் கதை.

நல்லவைகள் முதலில்... இந்த நாவல் நாத்திகத்தின் valid points-ஐ முன்னிறுத்தி அதற்கு பதிலலிக்கிறது. பக்தி, கோவில் வழிபாடு என பல கேள்விகளுக்கு இந்திரா தன்னால் இயன்றபடிக்கு பதில் தர முயற்சித்து இருக்கிறார். கோவில் என்பது வெறும் சாதனம். இது ஒருவருக்கு பலனளிப்பதாகவும், மற்றவர்களுக்கு எதிரானதாகவும் தெரிகிறது. இது வெறும் மாயையே. இறைவனானவன் இந்த இரு அணிகளுக்கும் பொதுவானவன். எப்போதுமே ஆன்மபலத்துக்கே வலிமை அதிகம். யாருடைய அணிக்கு உறுதி இருக்கிறதோ அவர்களே வெல்வார்கள். ஆனால் இவை தற்காலிக மாற்றங்களே. அவர்களின் உயிர் பயணத்தில் அவர்கள் மீண்டும் ஆலயத்தின் வாசலுக்கே வருவார்கள். ஆவர்களின் உயிர்வட்ட சுழற்ச்சியில் அது என்றும் நிகழும் அன்பதை வான் கணித வழி அறியலாம்.

மற்றும் ஒவ்வொரு அத்தியாயத்தின் முன்பு எழுதியுள்ள சிறு கட்டுரைகளில் அவரது ஆராய்ச்சி வெளிப்படுகிறது. Infact அதை மட்டுமே அவற்றை தனியாக ஒரு புத்தகமாகவே வெளியிடலாம். அவ்வளவு கருத்தாழம். இது இந்த நாவலின் சுவாரசியத்தை மேலும் கூட்டுவதாக உள்ளது. மேலும் கதை ஜெட் வேகத்தில் நகர்கிறது. பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பு கூடுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு அத்தியாயத்திலும் புது புது கதாபாத்திரங்கள் முளைத்து பல்வேறு திருப்பங்களை தருகின்றனர். இவை இந்த நாவலின் பலங்கள்.

பலவீனங்கள் என்று பார்த்தால்... நாவல் முழுவதும் ஒரே 'ரகசியமாய் ஒரு ரகசியம்' வாசனை அடிப்பதை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக பூட்டப்பட்ட கோவில் உள்ளில் நாய்கள் காவல் இருப்பதும், ஓலை சுவட்டில் நடக்கப்போவது பாடலாக வடிக்கப்பட்டு இருப்பதும் என பல நிகழ்ச்சிகள் நாம் இந்திராவின் பழைய நாவல்களில் ஏற்கனவே கண்டதே.
தேவையற்ற கதாபாத்திரங்கள் நிறைய நிறைந்திருக்கின்றன இந்த புத்தகத்தில். சமயத்தில் வெறும் பரபரப்பை கூட்டவே இந்திரா இந்த யுக்தியை கையாண்டிருக்கின்றாரோ என்று கூட தோன்றுகிறது. பழங்கால நினைவுகள் அவ்வப்போது வருவது எந்த ஒரு பெரிய திருப்பத்தில் முடியவில்லை. குப்தாஜியும், ரமணி சாஸ்த்திரியும் என்ன ஆனார்கள் என்பதை முடிக்காமலேயே விட்டுவிடுகின்றார். மேலும் ஃபைவ் எக்ஸ் என்ற திருட்டு கும்பலை மிக பயங்கரமானவர்களாக காட்டிவிட்டு கடைசி வரை வெறும் பொறியாகவே நமத்துபோக செய்துவிடுகிறார்.

இந்திராவின் மற்ற நாவல்களில் (ரகசியமாய் ஒரு ரகசியம், விட்டு விடு கருப்பா) ஒரு cleverness - சாமர்த்தியம் தெரிந்தது. கடவுளின் பெயரில் மனிதனின் நுனுக்கமான சித்து விளையாட்டுக்கள், அவை முடிச்சவிழ்க்கப்படும் விதங்கள் என ஒருவித பரபரப்பும், புத்திசாலித்தனமும் இருந்தது. ஆனால் 'சிவம்'-ல் இந்திரா முழுவதுமாக கடவுளே தன்னை காத்துக்கொள்வதாக கொண்டு போயிருப்பது சற்று ஏமாற்றத்தையே தருகிறது.

இது இந்திராவின் சிறந்த நாவல்களில் ஒன்று இல்லை என்று மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும்.இருப்பினும் அவர் ஏன் முன்னுரையில் அப்படி எழுதியிருந்தார் என்பது அவரது கதை களங்களை போல மர்மமாகவே இருக்கிறது. அப்படி என்ன தான் எழுதியிருக்கிறார்? - "சிவம் என்கிற இந்த தொடர் நான் எழுதிய தொடர்களிலேயே மிகமிக வித்தியாசமாக மட்டுமல்ல, என் இறப்புக்குப் பிறகும் எனக்கு பெயர் சேர்க்கவல்லது என்று கருதுகிறேன்....இன்றைய ஹைடெக் யுகத்தில் இறை சிந்தனையை இது புராண நூல்கள் ஏற்படுத்தியதைவிட அதிகம் ஏற்படுத்தியது." - A statement that could have been easily avoided.

பிரசுரம்: திருமகள் நிலையம், 16, வெங்கட் நாராயணா சாலை, தி. நகர், சென்னை - 17
பக்கம்: 465
விலை: ரூ. 120/-