Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
{mosimage}'நீ உன் நண்பர்களை கூறு, நீ யார் என்று சொல்கிறேன்' வழக்கமாக சொல்லப்படும் ஒரு பழமொழி. நீ படித்ததை கூறு, உன்னை பற்றி கூறுகிறேன் - இது புதுமொழி. தமிழர்களிடம் படிக்கும் பழக்கம் நிறைய அதிகரித்திருக்கிறது என்று பதிப்பகத்தினர்கள் சொல்வது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு வேளை மக்கள் 'idiot box' எனப்படும் டி.வியிடம் இருந்து விடுதலை தேடுகிறார்களோ? இந்த நினைப்பே 'refreshing'-ஆக இருக்கிறது. சமீபத்தில் என் அம்மா எனக்கு பெண் பார்க்கும் போது, நான் போட்ட நிபந்தனைகளில் முக்கியமானவை இரண்டு - பெண்ணுக்கு 'மெகா சீரியல்' பார்க்கும் பழக்கம் இருக்க கூடாது, பெண்ணுக்கு படிக்கும் பழக்கம் இருக்க வேண்டும் என்பதே அவை. அதற்கு என் அம்மா பார்த்த பார்வை 'உனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் நடக்காது' என்பது போல இருந்தது. 'இந்த பரபரப்பான வாழ்க்கையில் ஆஃபீசிலிருந்து வீட்டுக்கு வந்து தூங்கவே நேரம் போதுமானதாக இருக்கிறது. இதில் படிக்கும் பழக்கத்திற்கு ஏது சமயம்? எனவே இல்லையென்றால் என்ன பெரிய வித்தியாசம் இருக்கபோகிறது. So இந்த நிபந்தனையை தளர்த்திக்கொள்' என்று சொன்னார்கள்.

எனக்கு புரியாத ஒரு விஷயம் என்னவென்றால் 'ஏன் மக்கள் இந்த இயல்பான விஷயத்தை (படிக்கும் பழக்கத்தை) ஒரு விசேஷ குணமாக கருதவேண்டும்?' நம்முடைய resume-ல் hobbies என்கிற இடத்தில் 'reading' என்பதை ஒரு பெருமைக்குரிய விஷயமாக்குகிறோம்? பல் துலக்குவதை போல, குளிப்பதை போல அதுவும் ஒரு இயல்பான விஷயமாகட்டுமே.

என் தங்கை கணவர் தனக்கு பெண் பார்க்கும்போது தனக்கு மனைவியாக வரப்போகிறவள் ஒருமுறையேனும் 'பொன்னியின் செல்வன்' புத்தகத்தை முழுமையாக படித்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தாராம். அதிர்ஷ்டவசமாக என் தங்கைக்கு படிக்கும் பழக்கம் இருந்ததால் அவள் 'பொன்னியின் செல்வன்'-ஐ படித்திருந்தாள். சமீபத்தில் தான் இந்த நிபந்தனை பற்றி மாமா என்னிடம் சொன்னார். மாமா அதற்கு காரணமும் சொன்னார் - கிட்டத்தட்ட 3000 பக்கங்கள் படிக்கும் பொறுமை கொண்ட பெண்ணுக்கு, எந்த பிரச்சனைகளையும் சூழ் நிலைகளையும் நிதானமாக ஆராயும் பொறுமையும் இருக்கும். அதற்கு தான் இந்த நிபந்தனையை விதித்தேன் என்றார். அவர் சொல்வதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

படிக்கும் மனங்களுக்கு ஒரு பக்குவம் உண்டு. படிக்கும் போது நாம் அந்த பாத்திரங்களோடு ஒன்றிப்போகும்போது நாம் அவர்களை உணரமுடிகிறது. வாழாமலே நமக்கு அவர்களின் அனுபவங்கள் கிடைக்கின்றது. இந்த அனுபவங்கள் நம்மை செம்மை படுத்துகின்றன. என்னை பாதித்த புத்தகங்களில் குறிப்பாக 'தாயுமானவன், உள்ளம் கவர் கள்வன்', என் வாழ்க்கையின் அனுகுமுறையை மாற்றியது என்று சொல்வேன். அவைகளை இளமையில் படிக்காமல் விட்டிருந்தால் ஒருவேளை நானும் பெண்களை மதிக்காதவனாக, இச்சை பொருளாக மட்டுமே கருதும் மிருகமாகவும் மாறியிருக்கலாம். சுவாமி சுகபோதானந்தா-வின் 'மனசே! ரிலாக்ஸ் ப்ளீஸ்' படிக்கும்போது நான் என்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளோடு இணைத்து படித்தேன். பல விஷயங்கள் தெளிவாக புரிந்தது. இதே அனுபவங்களை நான் பெற சில பல அழுகையும், வேதனைகளையும் அனுபவித்திருக்கவேண்டும்.

டி.வி, சினிமா ஆகியவையும் கலை படைப்புக்கள் என்கிற போதும், அவை நமது கற்பனைகளுக்கு வேலை வைப்பதில்லை. ஆனால் படிக்கும் பழக்கத்தின் முதல் தகுதியே நாம் படிப்பதை உருவகப்படுத்திக்கொள்ளும் திறமை வேண்டும் என்பதே. நாம் பலரும் படிக்கும் ஒரே புத்தகத்தில் என் கதானாயகனின் முகம் உங்கள் நாயகனை போல இருக்கவேண்டும் என்பது இல்லை. நம் கற்பனைகள் வேறு, அது தனி மனிதர்களின் சூழலை பொறுத்த விஷயம். எனக்கு எப்போதும் நான் படிக்கும் புத்தகத்தை 'visualise' செய்யும் பழக்கமுண்டு. நான் 'பொன்னியின் செல்வன்' படிக்கும்போது வந்தியத்தேவனாக கமலஹாசனையும், மற்ற பாத்திரங்களுக்கு எனக்கு சரி என்று தோன்றிய முகங்களோடு உருவகப்படுத்திகொண்டேன். கல்கியின் வர்ணணைகளை விரிவுபடுத்தி ஒரு புதிய உலகத்தில் நுழைந்தேன். இன்றும் என்னால் மறக்க முடியாத அனுபவமாக மாறியது இந்த கல்கியின் படைப்பு. கற்பனையின் பிரம்மாண்டத்துக்கு 'budget' இல்லை.


நான் 9ம் வகுப்பு படிக்கும்போது பாலகுமாரனின் 'தாயுமானவன்' DD-ல் தொடராக வந்தது. சுமாராகத்தான் இருந்தது. ஆனால் அதை புத்தகமாக சில வருடங்களுக்கு பிறகு படித்தபோது அதன் ஆழத்தில் ஆடிப்போனேன். புத்தகத்தின் சுவாரசியத்தின், கருத்துக்களின் ஆழத்தின், அந்த பாதிப்புக்களின் நூற்றின் ஒரு பங்கை கூட இந்த 'visual medium' தர முடியவில்லை. அதன் பின்பு பல நாவல்களின் திரைப்பதிப்பை டி.வி-யில் பார்த்தபோதும், அந்த மூலத்தின் பாதிப்பை இந்த தொடர்கள் துளியும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக தேவிபாலாவின் 'மடிசார் மாமி', 'இப்படிக்கு தென்றல்' மற்றும் எண்டமூரியின் 'முள்பாதை'. மூல நாவலை படித்தவர்களுக்கு இந்த தொடர்கள் எந்த விதத்திலும் திருப்தி அளித்திருக்காது. இந்த நிகழ்ச்சிகள் என்னை மேலும் புத்தகப்பிரியனாக மாற்றியது.

படிப்பது என்பது வெறும் நாவல்களை மட்டுமோ அல்லது தத்துவ 'manual'களோ மட்டும் அல்ல. அது அவரவர் ஈடுபாட்டை பொறுத்தது. படிக்கும் பழக்கம் உண்டெங்கில் தானாக பல துறைகளை (genre) படிக்கும் வாய்ப்புக்கள் கிட்டும். One thing will lead to other. அதனால் நம்மை அடிக்கடி புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்பு (reinventing) கிடைக்கும். ஒன்று போல இருப்பது சில நாட்களுக்கு பிறகு சலிப்பை ஏற்படுத்தும். இது போல reinventing நமக்கு புத்துணர்ச்சி தரும். அந்த சலிப்பை தவிர்த்து வாழ்க்கையை சுவாரசியம் மிகுந்ததாக மாற்றிக்கொள்ளலாம். ஜென் பழமொழியில் சொல்வதுபோல 'ஒரு நதியில் இரண்டு முறை குளிக்க முடியாது', அர்த்தம் 'மாற்றங்களே வாழ்க்கை'. அந்த மாற்றங்கள் நல்லவையாக அமைய புத்தகங்கள் வகை செய்யும்.

அதற்காக டி.வி-யை முற்றிலுமாக ஒதுக்கி வைக்கமுடியாது. Discovery Channel போல ஒன்றிரண்டு 'உருப்படி'யான சேனல்களில் காண்பதை நாம் படித்து உருவகப்படுத்தி பார்க்க இயலாது. முடியாது என்று சொல்வதைவிட 'தகவல்களை தவறவிடும் வாய்ப்புக்கள்' அதிகம். எனவே சிலவற்றை படிப்பதை விட பார்ப்பதே நல்லது. குறிப்பாக 'Documentry'க்கள் மற்றும் 'technical demonstration'-கள்.


தவிர தற்போதைய செய்தி சேனல்கள் மீது எனக்கு பெரிய நல்ல அபிப்பிராயம் இல்லை. போட்டியின் காரணமாக 'பரபரப்பு' செய்திகளை நாடி, தீயவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன இந்த சேனல்கள். அவர்கள் கடமை பரபரப்பான நிகழ்ச்சிகளை வெளியே கொண்டுவருவது மட்டுமே. உதாரணமாக நிதாரி படுகொலைகளை பற்றி இப்போது யாரும் 'follow up' செய்கிறார்களா என்று தெரியவில்லை, ஆனால் வெளியே வந்தபோது 4-5 நாட்களுக்கு அதை தவிர வேறெதையுமே இந்த சேனல்கள் காண்பிக்கவில்லை. 24 மணி நேரத்தில் 23 மணி நேரத்துக்கு தீயவைகளை மட்டுமே காட்டி, நாம் வசிக்கும் உலகம் பொல்லாதது என்று 'நல்லா பீதிய கிளப்புறாங்கப்பா'. நம்மில் பலர் நல்ல காரியங்களை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு 'media' போதுமான முக்கியத்துவத்தை தருவதில்லை. இந்த செய்தி சேனல்களுக்கு 'Being good is boring'. எனவே தான் நான் என் நண்பர்களை அதிகம் செய்தி சேனல்களை பார்க்காதீர்கள் என்று சொல்வேன். ஒரு ஆய்வின்படி அதிகம் செய்தி சேனல்கள் பார்ப்பவர்களே உலகில் மிகவும் பயந்த சுபாவம் (paranoid) கொண்டவர்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 36 ஸ்டால்கள் கொண்ட நெய்வேலி புத்தக கண்காட்சி இந்த ஆண்டு 150 ஸ்டால்கள் அளவுக்கு வளர்ந்துள்ளது என்பது எனக்கு மிக சந்தோஷமான செய்தி. தற்போதைய தலைமுறை தாங்கள் இழந்த படிக்கும் பழக்கத்தை இளைய தலைமுறைக்கு மீட்டுத்தரும் ஒரு மௌனப்புரட்சி நடந்துக்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கதே. வரும் தலைமுறையேனும் தங்கள் resume-களில் படிப்பது என்பதை ஒரு தனித்தன்மையாக போடாமல் அதை ஒரு இயல்பான, அன்றாட செயலாக மாற்றிக்காட்டட்டும்.