போன தடவை "ஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை"யிலே என்னோட வாழ்க்கையிலே நான் ஜிம்முக்கு போன கடந்த மூன்று காலகட்டத்தை சொல்லியிருந்தேன். அடுத்த பாகம் எப்போ ஆரம்பிக்கும்னு தெரியாம இருந்தேன். காரணம் என்னோட பலவீனம். ஜிம் போறதை விட்டுட்டா என்னால அதை திரும்ப ஆரம்பிக்க முடியாது. ஜிம்முக்கு போறதுக்கு வாய்ப்பு இருந்தாலும் அதை தவிர்க்குறதுக்கு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சுட்டே இருப்பேன்.
ஜிம்ல சேர்றதுக்கு பணம் கட்டிட்டு, ஆனா சாயங்காலம் ஆபீஸ்ல இருந்து வரும்போதே "இன்னைக்கு உடம்பு அசதியா இருக்கு...", "இன்னைக்கு வீட்டில முடிக்கவேண்டிய ஆபீஸ் வேலை அதிகமா இருக்கு.." என்று காரணம் கண்டுபிடிச்சுட்டே இருப்பேன். ராத்திரி படுக்கப்போகும்போது "அடடா.. இன்னைக்கு சாயங்காலம் போயிருக்கலாமே, ஒரு பொழுதை தவறவிட்டுட்டோமே"ன்னு குற்ற உணர்ச்சியா இருக்கும். "நாளைக்கு சாயங்காலம் கட்டாயம் போவேன்"னு நினைச்சுக்குவேன். அடுத்த நாள் காலையிலே ஆஃபீஸ் போகும்போது "இன்னைக்குக்சாயங்காலம் சீக்கிரம் வந்து ஜிம்முக்கு போகனும்"னு தோணும். சொல்லப்போனா ஆஃபீஸ் நினைப்பை விட அது தான் அதிகமா மனசிலே ஓடிட்டு இருக்கும். ஆனா சாயங்காலம் "பழைய குருடி கதவை தொறடி" கணக்கா மட்டம் போட காரணம் தேடும்.
அப்படி இப்படின்னு மனப்போராட்டம் நடந்து ஒரு வழியா கடந்த ஃபிப்ரவரி ஒன்னாம் தேதி முதல் திரும்ப போக ஆரம்பிச்சேன். எந்த ஒரு விஷயத்தையும் 21 நாள் தொடர்ந்து செஞ்சா அது பழக்கம் ஆயிடுமாம். ஆனா தினமும் ஜிம்முக்கு போகமுடியாதே.. ஆரம்பத்துல வாரத்துக்கு 4 நாளாச்சும் போகனும்னு முடிவு பண்ணி எப்படியோ ஒரு மாசமா ரெண்டு வாரம் 5 நாள், ரெண்டு வாரம் 4 நாளுன்னு வெற்றிகரமா போயிட்டேன். இப்போ எல்லாம் சாயங்காலம் மான் மாதிரி துள்ளிக்குதிச்சு போகலைன்னாலும், என்னையே நானே தரதரன்னு இழுத்துக்குட்டு ஜிம்முக்கு போற அளவுக்கு ஓரளவுக்கு மனசை தேத்திக்கிட்டேன்.
இடைவெளி விட்டப்புறம் ஜிம்முக்கு போகும்போது திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்... அது தான் கொடுமை. கடைசியா ஜிம்மை விட்டப்போ தினமும் 100 ஸ்குவாட்ஸ், 30 பவுண்டு டம்பெல்ஸ் தூக்குறது, தினமும் 100 புஷ் அப்ஸ்-ங்குற நிலைமையிலே இருந்தேன். ஆனா திரும்ப ஆரம்பிக்கும் போது 30 ஸ்குவாட்ஸ், 20 பவுண்டு வெயிட், 0 புஷ் அப்ஸ்-ங்குற நிலைமையிலே இருக்கேன். தொடர்ந்து போனா நிச்சயம் பழைய அளவுக்கு சீக்கிரம் போயிடலாம். ஆனால் என்னோட நோக்கம் Body Transformation-ங்குறதை மீறி Fitness-ஐ வாழ்க்கையின் தினசரி பாகமாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்பது தான். பார்க்கலாம்.. எது வரைக்கும் போகிறது என்று.
ஜிம்முக்கு போறவங்க எல்லாரும் சந்திக்கும் தடுமாற்றம் - என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யனும், எந்த வரிசையிலே செய்யணும்னு சொல்றதுக்கு ஆள் இல்லை. ஆரம்பத்துல ஆர்வத்தோட போறவங்க எல்லாரும் தங்களுக்கு தெரிஞ்ச உடற்பயிற்சி எல்லாம் செய்வாங்க. அதிலே பலன் தெரியாதபோது கைவிட்டுடுறாங்க. இந்த தடவை நான் பண்ணின உருப்படியான காரியம் - Workout schedules மற்றும் Training app தேடிப்பிடிச்சு ஆரம்பிச்சது தான்.
உடம்பின் ஒரு பாகத்துக்கு தினசரி உடற்பயிற்சி செய்யக்கூடாது என்பது முதல் பாடம். தினசரி 100 தடவை crunches பண்ணினா பிரயோஜனம் இல்லங்குறது நிறைய பேருக்கு தெரியாது. ஆரம்பத்தில் வாரத்துக்கு 4 நாள் உடற்பயிற்சி போதுமானது. அந்த நாலு நாளுக்கு ஒவ்வொரு உடற்பாகத்துக்கும் பிரித்து பிரித்து செய்தாலே போதும். மேலும் எடுத்த உடனேயே fitness model மாதிரி உடம்பு வைக்க முயற்சி செய்தால் ஏமாற்றமே மிஞ்சும். அதனால முதல்ல ஒரு 2-3 மாசம் தினசரி போகிற பழக்கத்தை consolidate பண்ணிக்கலாம். அதுக்கப்புறம் targetting செஞ்சுக்கலாம்.
Body Split Workout Schedule
1. Chest/Back/Abs
2. Quads/Calves
3. Shoulder/Arms/Abs
4. Hamstrings/Glutes
Cardio - 15 ~ 20 minutes everyday.
எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் அந்த 2 Android apps இவை தான். Click the name to open the link
GymMentor - இதுல என்னைக்கு என்ன உடற்பயிற்சி செய்யனும்னு ஒரு schedule இருக்கும்.
Gym Workout - இதுல ஒரு உடம்பு பாகத்துக்கு என்னென்ன உடல்ற்பயிற்சிகள் செய்யலாம், அதோட செய்முறை (Video & Gif image) இருக்கும். அதிலிருந்து உங்கள் ஜிம்மில் உள்ள equipments-ஐ கணக்குல எடுத்துக்கிட்டு எந்த உடற்பயிற்சி செய்யலாம்ன்னு தேர்ந்தெடுத்துக்கலாம்.
FitNotes - இதுல நீங்க அன்னனைக்கு செய்யுற உடற்பயிற்சி எல்லாம் குறிச்சு வச்சு, எந்த மாதிரி உடற்பயிற்சிகள் செஞ்சிருக்கீங்க, எவ்வளவு கடினத்தன்மை (intensity) செய்யுறீங்கன்னு உங்களை மேம்படுத்திக்க உதவியா இருக்கும்.
எனக்கு ஒரு (மூட)நம்பிக்கை உண்டு - எந்த ஒரு விஷயத்தை நான் செய்யுறேன்னு வெளியே சொல்றேனோ அந்த விஷயம் சீக்கிரம் முடிஞ்சுடும். ஆனா இந்த தடவை அந்த (மூட)நம்பிக்கையையும் மீறி நான் ஜிம்முக்கு போறதையும், என்ன செய்யனும்னு நான் தெரிஞ்சுகிட்டதையும் எழுதுறதுக்கு காரணம் - என்னை போல தடுமார்றவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கு என்னோட அனுபவம் உதவட்டும். அந்த வாழ்த்தில் இந்த (மூட)நம்பிக்கையும் உடையட்டும்.